Published : 10 Aug 2019 04:54 PM
Last Updated : 10 Aug 2019 04:54 PM

காஷ்மீர் விவகாரம்; நாடாளுமன்றத்தில் காங்கிரஸை விட பாஜகவை தான் அதிகம் தாக்கிப் பேசினேன்: வைகோ

சென்னை

காஷ்மீர் விவகாரத்தில், காங்கிரஸைவிட பாஜகவைத்தான் தாக்கிப் பேசியதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் மதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது குறித்து கலந்தாலோசிக்கலாமா என்பதைக் கூட பிரதமர் மோடி கேட்கவில்லை. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது குறித்தோ, பொது சிவில் சட்டம் குறித்தோ கேள்வியே எழவில்லை. அதனால்தான் நான் வாஜ்பாயை மதிக்கிறேன்.

அவரும் ஆர்எஸ்எஸ்-ல் இருந்து வந்தவர்தானே?அவர் இந்தியாவின் தட்பவெப்ப நிலையை உணர்ந்துகொண்டு, இந்த நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தால் தான் நாட்டில் ஜனநாயகம் இருக்கும், மதச்சார்பினைமையைப் பாதுகாத்தால் தான் மக்களாட்சித் தத்துவம் நிலைக்கும் என்பதை உணர்ந்துகொண்ட தலைவராக அவர் இருந்தார். அவர் உண்மையான ஜனநாயகவாதி.

காஷ்மீரில் தலைவர்களுக்கு கட்டுப்பாடு

பாஜகவினர் மிக அதிகமாக வினையை விதைத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த 4-ம் தேதி இரவு ஃபரூக் அப்துல்லாவிடம் நான் பேசினேன். அப்போது, காஷ்மீரில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க மசோதா கொண்டு வருவது குறித்த செய்தி பற்றிக் கேட்டேன். அதற்கு தான் மறுநாள் இரவு டெல்லி வருவதாகவும், என்னைச் சந்திப்பதாகவும் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.

மறுநாள் காலை இந்த ஜனநாயகத்திற்கே கொள்ளி வைக்கும் வேலையைச் செய்வார்கள் என யாருக்கும் தெரியாது. பாஜகவினருக்கும் தெரியாது. ஃபரூக் அப்துல்லாவுக்கும் தெரியாது. அதன்பிறகுதான் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து, தன்னைச் சிறைப்படுத்தியதைத் தெரிவித்தார். இதேபோன்றுதான், ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி போன்ற தலைவர்களையும் பூட்டி வைத்துள்ளனர்.

காஷ்மீரில் 2 லட்சம் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மிக விபரீதமான விளைவுகளை இது ஏற்படுத்தும். மதரீதியான தாக்குதல்கள் ஏற்படும் என்ற அச்சம் எனக்கு உள்ளது.

காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் இதுகுறித்த எனது உரையில் காங்கிரஸைவிட பாஜகவைத்தான் தாக்கிப் பேசியுள்ளேன். காங்கிரஸை 30 சதவீதமும், பாஜகவை 70 சதவீதமும் தாக்கிப் பேசினேன்".

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x