

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுகவுக்கு கிடைத்திருப்பது உண்மையான வெற்றி அல்ல என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று (சனிக்கிழமை) மாடக்குளம் கண்மாய் பகுதியில் குடிமராமத்துப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, "வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்குக் கிடைத்திருப்பது உண்மையான வெற்றி அல்ல. சிறுபான்மையினரை வழி மாற்றி கிடைத்த வெற்றி.
தமிழகத்தில் இருக்கக் கூடிய ஏரிகள், குளங்கள், நீர்வழிச்சாலைகள் புனரமைக்கும் பணி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
மதுரை மாவட்டத்தில் 43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீர் நிலைகளில் யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் நிச்சயமாக அவை அகற்றப்படும்.
மதுரையில் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டாலும்கூட குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைப்பதற்கு முதல்வர் எடுத்துவரும் நடவடிக்கைகள்தான் காரணம். விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை உரிய காலங்களில் திறக்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்" என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.