

வேலூர்
வேலூர் மக்களவைத் தேர்தலில் முதல் ஆறு சுற்றுகளில் பின்தங்கிய திமுக வேட்பாளரை வாணியம்பாடி, வேலூர், ஆம்பூர் தொகுதிகளில் கிடைத்த வாக்குகள் முன்னிலைக்கு கொண்டு சென்றதுடன் வெற்றியையும் உறுதி செய்தது.
வேலூர் மக்களவைத் தேர்தலில் ஏறக்குறைய 4 லட்சம் இஸ்லாமியர், கிறிஸ்தவர்களின் வாக்குகளை பெற ஆரம்பத்தில் இருந்தே திமுக வியூகங்களை வகுத்து வந்தது. திமுகவின் வியூகத்தை உடைத்து கணிசமான சிறுபான்மையினர் வாக்குகளை கவருவதற்காக அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வாக்குப்பதிவு நடைபெறும் கடைசி நிமிடங்கள் வரையும் பலமுனைகளில் முயற்சிகளை மேற்கொண்டனர்.
அதேபோல், இந்தத் தேர்தலில் முதலியார் சமூக வாக்குகளை முழுமையாக பெற அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பல கட்ட வியூகங்களை அமைத்தார். அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றிருந்ததால் கணிசமான வன்னியர் மக்களின் வாக்குகளை கவர திமுக பொருளாளர் துரைமுருகன் முயற்சிகளை மேற்கொண்டார். வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் திமுக, அதிமுக என இரண்டு தரப்பும் வியூகங்களை கடந்து வாக்குகளை சேகரிக்க கடுமையாக போராடினர்.
வேலூர் மக்களவைக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் விறுவிறுப்பு கடைசி சுற்றுவரை அதிகமாகவே காணப்பட்டது. திமுக வேட்பாளர் கதிர்ஆனந்துக்கு வேலூர், வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதிகளில் அதிகப்படியான வாக்குகள் கிடைத்தன. இதில், திமுக வேட்பாளரின் வெற்றிக்கு உதவிய தொகுதியாக வாணியம்பாடி இருந்தது. இந்தத் தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட கதிர்ஆனந்த்துக்கு 22,351 வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளன. அதேபோல், வேலூரில் 6,275 வாக்குகளும், ஆம்பூரில் 8,603 வாக்குகளும் அதிகமாக கிடைத்தன.
அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் தொகுதியில் அதிகப்படியான வாக்குகள் கிடைத்தன. இதில், குடியாத்தம் தொகுதியில் அதிகபட்சமாக 11,291 வாக்குகள் திமுக வேட்பாளரை விட அதிகம் கிடைத்தன. அணைக்கட்டில் 9,539-ம், கே.வி.குப்பத்தில் 8,109 வாக்குகளும் அதிகம் கிடைத்தன.
தொகுதி நிலவரம்
கதிர் ஆனந்துக்கு வேலூரில் (78,901 வாக்குகள்), அணைக்கட்டில் (79,231 வாக்குகள்), குடியாத்தத்தில் (82,887 வாக்கு கள்), கே.வி.குப்பத்தில் (71,991 வாக்குகள்), வாணியம்பாடியில் (92,599 வாக்குகள்), ஆம்பூரில் (79,371 வாக்குகள்) கிடைத்தன.
ஏ.சி.சண்முகத்துக்கு வேலூரில் (72,626 வாக்குகள்), அணைக்கட்டில் (88,770 வாக்கு கள்), குடியாத்தத்தில் (94,178 வாக்குகள்), கே.வி.குப்பத்தில் (80,100 வாக்குகள்)வாணியம்பாடியில் (70,248 வாக்குகள்), ஆம்பூரில் (70,768 வாக்குகள்) கிடைத் தன.
சட்டப்பேரவை இடைத் தேர்தல் நடந்த குடியாத்தம் தொகுதியில் திமுகவுக்கு குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளன. அதேபோல், ஆம்பூர் தொகுதியில் அதிமுகவைவிட திமுகவுக்கு அதிக வாக்கு கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.