

திருநெல்வேலி
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் தொடர் மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது.
மழை அளவு
நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிக பட்சமாக குண்டாறு அணையில் 67 மி.மீ. மழை பதிவானது. மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்) விவரம் வருமாறு:
அடவிநயினார் கோவில் அணை- 65, செங்கோட்டை- 49, தென்காசி- 44, கருப்பாநதி அணை- 36, பாபநாசம்- 31, சேர்வலாறு- 27, ஆய்க்குடி- 26.80, கொடுமுடியாறு அணை, சிவகிரியில் தலா 20, கடனாநதி அணை-11, அம்பாசமுத்திரம்- 10, ராதாபுரம், சங்கரன்கோவிலில் தலா 8, ராமநதி அணை- 5, மணிமுத்தாறு- 3.40, நாங்குநேரி- 3, சேரன்மகாதேவி, பாளை யங்கோட்டை, திருநெல்வேலியில் தலா 1.
உயரும் நீர்மட்டம்
தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நேற்று காலையில் விநாடிக்கு 6,239 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 155 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 85.50 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 13 அடி உயர்ந்து 121.72 அடியாக இருந்தது.
மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1,481 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 200 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் மூன்றேமுக்கால் அடி உயர்ந்து 56.75 அடியாக இருந்தது. கடனாநதி அணைக்கு விநாடிக்கு 249 கனஅடி நீர் வந்தது. 10 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 58 அடியாக இருந்தது.
குண்டாறு நிரம்பியது
ராமநதி அணைக்கு 134 கனஅடி நீர் வந்தது. 2 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் நான்கரை அடி உயர்ந்து 69.50 அடியாக இருந்தது. கருப்பாநதி அணைக்கு 401 கனஅடி நீர் வந்தது. 2 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 12.75 அடி உயர்ந்து 57.75 அடியாக இருந்தது. குண்டாறு அணை முழு கொள்ளளவில் (36.10 அடி) நீடிக்கிறது. அணைக்கு வரும் 135 கனஅடி நீரும் உபரி நீராக வெளியேற்றப்பட்டது.
கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 3.50 அடி உயர்ந்து 47 அடியாக இருந்தது. நீர் வரத்து விநாடிக்கு 149 கனஅடியாக இருந்தது. அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து 99 அடியாக இருந்தது. அடிணைக்கு விநாடிக்கு 235 கனஅடி நீர் வந்தது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 2.75 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 9.44 அடியாகவும் இருந்தது. அணைகளில் தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குற்றாலத்தில் தடை
குற்றாலம் மலைப் பகுதியில் கன மழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்ததால் பாதுகாப்பு கருதி இந்த அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஆக்ரோஷமாக கொட்டும் வெள்ளத்தை சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.