Published : 10 Aug 2019 10:41 AM
Last Updated : 10 Aug 2019 10:41 AM

கோவை-நீலகிரியை மிரட்டும் மழை!

ஆர்.கிருஷ்ணகுமார்/ஆர்.டி.சிவசங்கர்

தண்ணீருக்காக மக்கள் தவியாய் தவிக்கும் சூழலில், `போதும் மழையே... பொறுத்தருள்க’ என்று கூறும் அளவுக்கு கோவை, நீலகிரி மாவட்டங்களில் கொட்டித் தீர்த்துள்ளது கனமழை. சென்னையில் மக்கள் தண்ணீருக்குப் படும்பாட்டைப் பார்த்தால் கண்ணீர் வரும். அதேசமயம், நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, சூரியனைக் காணமாட்டோமா என்று ஏங்கித் தவிக்கும் அளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்த வாரம் வரை இந்த அளவுக்கு மழை பெய்யும் என்று யாரும் சொல்லியிருந்தால், எள்ளி நகையாடியிருப்பார்கள். ஆனால், இந்த வாரம் கொட்டித் தீர்த்துவிட்டது மழை.

மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்த மழை, மலை மாவட்டமான நீலகிரியைப் புரட்டிப்போட்டுள்ளது. குறிப்பாக, உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு, சாலை பிளந்ததால் போக்குவரத்து துண்டிப்பு, வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம், விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்களில் தேங்கிய வெள்ளம் என மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகினர். நீர்நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் பெய்த கனமழை, நீராதாரங்களில் தண்ணீர் இருப்பை உயர்த்தியுள்ளது.

கோவையைப் பொறுத்தவரை, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் சாலையில் தண்ணீர் தேங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வீடுகளின் சுவர் இடிந்து காயம், போக்குவரத்து துண்டிப்பு, வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் என கோவை மக்கள் பெரும் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

வெள்ளக்காடானது மேட்டுப்பாளையம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை 100 அடி உயரம் கொண்டது. நீலகிரி மற்றும் கேரளப் பகுதி மலைக் காடுகளில் பெய்யும் கனமழையால் கடந்த 5-ம் தேதியே அணை நிரம்பியது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. வரலாறு காணாத அளவுக்கு விநாடிக்கு 88,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுவதால், பவானியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரப் பகுதி மக்களுக்கு ஏற்கெனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழலில், அதிகாரிகள் தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கும் ஆணையின் உதவி செயற் பொறியாளர் கிருஷ்ணகுமார், “24 மணி நேரமும் அணையைக் கண்காணித்து வருகிறோம். உயரமான மலைப் பகுதியில் உள்ள பில்லூர் அணையில் இருந்து ஆற்றின் வழியே கீழ்நோக்கி உபரிநீர் வெளியேற்றப்படுவதால், முன்கூட்டியே வருவாய், தீயணைப்பு, காவல் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது” என்றார்.

பவானி ஆற்றில் கரை புரண்டோடும் வெள்ளத்தால், மேட்டுப்பாளையம் உப்புப்பள்ளம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், அங்கு வசித்து வந்த 150-க்கும் மேற்பட்டோர், பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் சாலைகள், குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால் இப்பகுதியே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன. வச்சினாம்பாளையத்தில் மூன்று வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

வரும் நாட்களில் மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கிடையில், தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றுப் பகுதிகளை பார்வையிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். “வெள்ளகால பாதிப்புகளை சமாளிக்க பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துப் பராமரிக்க, உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

ஆக்ரோஷமாக மாறிய நீலகிரி!

அமைதியான நீலகிரி மாவட்டம் மழைக் காலங்களில் ஆக்ரோஷமாக மாறி, உயிர்களைப் பலி வாங்குகிறது. அதிக மழை பெய்யும் வனப் பகுதியாக இருந்த நீலகிரி மாவட்டம், மக்கள் பெருக்கம், நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றால் நிலச்சரிவு பேரிடர் நிகழும் மாவட்டமாக மாறிவிட்டது.

அவலாஞ்சியில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் குறித்து நீலகிரி ஆவணக் காப்பக இயக்குநர் டி.வேணுகோபால் கூறும்போது, “நீலகிரியில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து நினைவுகூறுகிறார்.
அவர் கூறும் போது, ‘நீலகிரியில் கடந்த 100 ஆண்டுகளாக வடகிழக்குப் பருவமழையால் அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 1990-ல் கெத்தை பகுதியில் நிலச்சரிவால் 54 பேர் உயிரிழந்தனர். 1924-ல் அவலாஞ்சி வனப் பகுதியில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டபோதும், வனப் பகுதியில் ஏற்பட்டதால், மக்கள் பாதிக்கப்படவில்லை. 1978, 1979-ம் ஆண்டுகளில் பெய்த கன மழையால் பெரும்பாலான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், வீடுகளில் வெள்ளம் புகுந்து, சேதமடைந்தன. கூக்கல்தொரை அருகே நிலச்சரிவால் 18 பேர் இறந்தனர். உதகையில் வெள்ளப் பெருக்கால் 9 பேர் பலியாகினர்.

1979-ல் மஞ்சூர் தொட்டக்கம்பை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு, 2 குழந்தைகள் மண்ணில் புதைந்தனர். அதே ஆண்டு சேலாஸ் பகுதியில் நிலச்சரிவால் 2 பெண்கள், 3 குழந்தைகள் உயிரிழந்தனர். 1990-ல் கெத்தையில் நிலச்சரிவு காரணமாக மின் வாரியக் குடியிருப்பில் வசித்து வந்த 54 பேர் உயிரிழந்தனர். 1993-ல் நிலச்சரிவால் பர்லியாறு, மரப்பாலத்தில் 12 பேர் உயிரிழந்தனர். அரசுப் பேருந்து அடித்துச் செல்லப்பட்டதில் 15 பேர் காணாமல் போனார்கள். 2002-ல் பந்தலூர் அருகேயுள்ள பக்னா முன்னாட் கிராமத்தில் இடி, மின்னல் பாய்ந்து 6 பேர் உயிரிழந்தனர். இதேபோல, 2005, 2006, 2007-ல் இடி தாக்கியும், மரம் விழுந்தும் பலர் உயிரிழந்தனர். 2009-ல் உதகை, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூரில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் மேற்பட்ட நிலச்சரிவு மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததில் 43 பேர் உயிரிழந்தனர்.

பொதுவாகவே, கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த நிலச்சரிவு மற்றும் மழை சேதங்கள் அனைத்துமே அக்டோர், நவம்பர் மாதங்களில்தான் அதிகம் நேரிட்டுள்ளன. பலமுறை விவசாயப் பயிர்கள் பெருத்த சேதத்துக்கு உள்ளாகின. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டு, மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்” என்றார்.

சமூக செயல்பாட்டாளர் கே.விஜயன் கூறும்போது, “ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், பாதுகாப்பான பகுதிகளில் மட்டுமே பங்களாக்கள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டன. ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கட்டிடங்கள் இன்றும் பாதுகாப்பாக உள்ளன. அதேபோல, தோடர், கோத்தர், குறுப்பர், பனியர் போன்ற பழங்குடியின மக்களும் பாதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது கட்டப்படும் நிறைய வீடுகள் தாழ்வான, செங்குத்தான மலைப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ளதால், கனமழையின்போது சரிவுகளில் உள்ள வீடுகளின் பாரங்களைத் தாங்காமல் நிலச்சரிவு ஏற்பட்டு, பலர் உயிரிழந்துள்ளனர்” என்றார்.

உதகை அரசுக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் போ.மணிவண்ணன் கூறும்போது, “நீலகிரி மாவட்டத்தில் தற்போது எங்கு பார்த்தாலும் பங்களாக்கள், ரிசார்ட்டுக்ள், ஹோட்டல்களாகவே காட்சியளிக்கின்றன. பெருமளவு மரங்கள், தேயிலைத் தோட்டங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால்தான், நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது. பெரிய கட்டிடங்கள் கட்டக் கூடாது என அரசு அறிவித்துள்ளபோதும், எவ்வித அனுமதியின்றி, உயர்ந்த கட்டிடங்களை கட்டியுள்ளனர். 1993 மாஸ்டர் பிளான் சட்டத்தையும் யாரும் மதிப்பதில்லை. அதேபோல, மலைகளில் இருந்து வரும் சிறிய ஆறுகள் மற்றும் ஊற்று நீர் கால்வாய் பாதைகளையும் மாற்றுவதால், மண் அரிப்பு அதிகரித்து, நிலச்சரிவு எற்பட்டு, அப்பாவி மக்கள் பலியாகின்றனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x