Published : 10 Aug 2019 10:37 AM
Last Updated : 10 Aug 2019 10:37 AM

மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கொட்டும் கன மழையிலும் நீரோட்டம் இல்லாத நல்லாறு: ஆக்கிரமிப்புகளை அகற்றி பராமரிக்க கோரிக்கை

பெ.ஸ்ரீனிவாசன்

திருப்பூர்

ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கி, கன மழையிலும் நீரோட்டம் இல்லாமல் காணப்படும் நல்லாற்றை பராமரிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்துவருவதால், நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி யுள்ள மாவட்டங்களிலுள்ள நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத் துள்ளது. அணைகள் நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டு, பிரதான ஆறுகளில் தண்ணீர் செல்கிறது.

திருப்பூர் மாவட்டத்துக்கு பிரதான நதியாக நொய்யல் உள்ளது. கோவை மாவட்டத்தில் வளமான பல்லுயிர்ச் சூழல் நிலவும் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சாடிவயல் அருகே சிற்றோடைகள் இணைந்து உருவெடுக்கும் நொய்யலாறு, சமவெளியில் இறங்கி கிழக்கு நோக்கி கோவை, சூலூர், பல்லடம், மங்கலம், திருப்பூர், ஈரோடு (ஒரத்துப் பாளையம் அணை) என 180 கி.மீ. பயணித்து, கரூர் அருகே நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது. செல்லும் வழியில் நொய்யல் ஆற்றுக்கு ஏராளமான கிளை நதிகள் மற்றும் நீர்வழித் தடங்கள் உள்ளன.

திருப்பூரில் நொய்யலுக்கு முக்கிய கிளை நதியாக நல்லாறு உள்ளது. கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே கெளசிகா நதியில் இருந்து பிரியும் நல்லாறு, அன்னூர், நரியம்பள்ளி, நம்பியாம்பாளையம், அவிநாசி, திருமுருகன்பூண்டி, அங்கேரிபாளை யம் வழியாக நஞ்சராயன் குளம் சென்று, திருப்பூர் அருகே மொரட்டுப்பாளையத்தில் நொய்யல் ஆற்றுடன் கலக்கிறது. நல்லாறு ஓடி வரும் வழிகளிலுள்ள மேட்டு நிலங்கள், இதன் முக்கிய நீர்பிடிப்பு பகுதிகளாக உள்ளன.

ஆரம்பப் பகுதியில் இருந்து முடிவு வரை பெரிய அளவிலான குளங்களுக்கு நீராதாரமாக உள்ள இந்த நதி, தற்போது கன மழை கொட்டியும் எந்தவித நீரோட்டமும் இன்றி காணப்படுகிறது.

1977-ம் ஆண்டுக்குப் பிறகு நல்லாற்றில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு எதுவும் ஏற்படவில்லை. 2017-ம் ஆண்டு பெய்த பெருமழையின்போது சிறிதளவு நீரோட்டம் இருந்தது.

மேற்குத்தொடச்சி மலையில் கனமழை கொட்டி வரும் நிலையில், அங்கிருந்து பிரிந்து வரும் நதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நொய்யலில் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் செல்கிறது. கிளை நதியான நல்லாற்றில் அதற்கான சுவடே இல்லை என கவலைப்படுகின்றனர் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள்.

இதுகுறித்து நல்லாறு பாதுகாப் புக் குழுவினர் (திருப்பூர்) ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறும்போது, ‘கனமழையால் பெரிய ஆறுகள் அனைத்திலும் நீர் நிரம்பி செல்லும் போது, சிற்றாறான நல்லாற்றில் எப்போதும்போல் சாக்கடை மற்றும் சாயக் கழிவுநீரே ஓடுகிறது. நல்லாற்றை பராமரிக்காததே இந்த அவல நிலைக்கு முக்கிய காரணம். திருப்பூர் என்றால் நொய்யல் ஆறுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எந்த சீரமைப்பு திட்டம் வந்தாலும், நொய்யல் ஆற்றையே பார்க்கின்றனர். இப்படி ஒரு நதி உள்ளது அரசுக்கே தெரியுமா, தெரியாதா என்பது தெரியவில்லை.

ஆக்கிரமிப்புகளால் நல்லாற்றின் அளவு குறுகிக்கொண்டே வருகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் நீர்வழிப்பாதையை மீட்பதே இதற்கு ஒரே தீர்வாக இருக்கும். நல்லாற்றின் இருபுறங்களிலும் சாய, சலவை ஆலைகள் அதிக அளவில் உள்ளன. இவற்றின் கழிவுநீர் செல் லும் குழாய்கள் ஆற்றின் குறுக்கே நெடுக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை அகற்றி பக்கவாட்டு பகுதி களில் உயரமாக அமைக்க வேண்டும்.

தரைக்கு கீழ் கழிவுநீர் குழாய்கள் செல்வதால், உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடினால்கூட தெரிய வருவதில்லை. இந்த நீர் நேராக சென்று நொய்யலில் கலக்கிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். நிலத்தடி நீர் மாசடைகிறது. மேலும், கட்டிட கழிவுகள், பின்னலாடை கழிவுகள் அதிக அளவில் நல்லாற்றில் கொட்டப்பட்டுள்ளன. தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நல்லாற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, அதன் நீர்வழித் தடங்களை அளவெடுத்து, ஆக்கிரமிப்புகள், கழிவுகளை அகற்றி நல்ல தண்ணீர் ஓட வழிவகை செய்ய வேண்டும்' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x