

ஆர்.கிருஷ்ணகுமார்
வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் 1,000 அடி, 1,200 அடிக்குக்கீழே சென்றுவிட்ட நிலையில், தற்போது பெய்யும் மழையை சேமித்து, பாதுகாக்கவும், வெள்ளத்தால் விளை நிலங்கள், குடியிருப்புகள் பாதிக்காமல் இருக்கும் வகையில், நீர்நிலைகளைத் தூர் வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.
கடந்த சில ஆண்டுகளாக போதுமான மழைப்பொழிவு இல்லாத நிலையில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. தண்ணீர் இல்லாததால் பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகள் படாதபாடுபட்டனர். குறைந்த தண்ணீர் தேவைப்படும் பயிர்கள், சொட்டுநீர்ப் பாசனம் உள்ளிட்ட வழிமுறைகளைக் கொண்டு, மிகுந்த சிரமத்துக்கிடையில் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பல பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறையும் நிலவுகிறது. இந்த நிலையில், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த 2, 3 தினங்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்யும் மழையால் நீலகிரி, கோவை மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. ஆறு, வாய்க்கால்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கோவை மாவட்டத்தின் சராசரி மழையளவு 679.77 மில்லிமீட்டர். 2011-ல் 905.40, 2012-ல் 411.40, 2013-ல் 583.13, 2014-ல் 696.98, 2015-ல் 768.34, 2016-ல் 300, 2017-ல் 511, 2018-ல் 772 மில்லிமீட்டர் மழை பெய்தது.
நடப்பாண்டில் கடந்த வாரம் வரை பெரிய அளவுக்கு மழைப்பொழிவு இல்லை. மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. பில்லூர் அணை நிறைந்து, பவானி ஆற்றில் ஒரு லட்சம் கனஅடிக்கு மேலாக தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இதேபோல, நொய்யல், ஆழியாறு என அனைத்து ஆறுகள் மட்டுமின்றி, கால்வாய்கள், வாய்க்கால்களிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. குரங்கு அருவி, கோவை குற்றாலம் அருவிகளில் பலத்த மழை காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது. மேலும், சில பகுதிகளில் விளை நிலங்களில் தண்ணீர் புகுந்தது.
ஒரு நாள் மழையையே ஆறுகள் கொள்ளவில்லை. பெரும்பாலான நீர்வரத்து மற்றும் நீர்வழிப் பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததாலும், தூர் வாரி, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாததாலும் மழை நீர் பயனின்றி, வாய்க்கால், சாக்கடைகளில் செல்வதாகவும், குடியிருப்புகளைச் சூழ்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி கூறும்போது, “நொய்யல், பவானி, கவுசிகா, அமராவதி, ஆழியாறு, பிஏபி உள்ளிட்ட ஆறுகளின் நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிப்புகளால் குறுகிவிட்டன. மேலும், குப்பை, பிளாஸ்டிக், கட்டிடக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளால் நிரம்பியுள்ளதுடன், புதர்கள், செடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் மழை பெய்து, ஆற்றில் தண்ணீர் வரும்போது பல இடங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி, கரைகளை உடைத்துக்கொண்டு, அருகில் உள்ள விளை நிலங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்கிறது. இதனால் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை உருவாகிறது. கரையோரப் பகுதி மக்கள் வீடுகளையும், உடமைகளையும் இழக்கின்றனர். குடியிருப்புகளில் சூழ்ந்த நீரை அகற்றுவது பெரும் சிரமமாக உள்ளது.
எனவேதான், ஆற்றின் நீர்வழிப்பாதைகள், வாய்க்கால்கள், குளம், குட்டைகளைத் தூர் வாரி, அவற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதேபோல, நீர்நிலை ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்.
தற்போது மழை தொடங்கியுள்ள சூழலில், வரும் நாட்களில் இன்னும் அதிக அளவு மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, கனமழை பெய்யும்போது ஆறு, வாய்க்கால்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். நீர்வழிப் பாதைகளைத் தூர் வாரி, கரைகளைப் பலப்படுத்தி முறையாகப் பராமரித்தால், மழை நீர் முழுவதும் குளம், குட்டைகளில் தேங்கும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயருவதுடன், அடுத்த கோடையின்போது தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் உதவியாக இருக்கும். அதேபோல, பல்வேறு இடங்களில் சிறிய தடுப்பணைகளைக் கட்டி, தண்ணீரைச் சேகரித்தால், வேளாண் சாகுபடிக்கும், குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். பொள்ளாச்சியில் 20 ஆயிரம் கன அடிக்குமேல் தண்ணீர் வீணாகி வெளியேறி, கேரளாவுக்குச் சென்று, கடலில் கலந்து வீணாகிறது. நல்லாறு திட்டத்தை நிறைவேற்றியிருந்தால், தண்ணீர் வீணாவதை தடுத்திருக்கலாம். நீர் மேலாண்மை மற்றும் நீர்நிலைகள் பராமரிப்பு தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனி ஆலோசனைக் கூட்டம் நடத்தி, விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
ஓடற தண்ணீரை நடக்க வை; நடக்கும் தண்ணீரை நிக்க வை!
சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறும்போது, “இந்தியாவில் 7.2 லட்சம் ஹெக்டேர் பரப்பில் ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன. போதுமான மழை பெய்யாதது, பராமரிப்பின்மை உள்ளிட்ட காரணங்களால், நீர்நிலைகளில் தண்ணீரின் கொள்ளளவு குறைந்து கொண்டே செல்கிறது. எனவே, நீர்மேலாண்மை மூலம் நீர் நிலைகளைப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். இதனால்தான் சிறுதுளி அமைப்பு நீர்நிலைகள் பராமரிப்பைக் கையில் எடுத்தோம்.
‘ஓடற தண்ணீரை நடக்க வை; நடக்கற தண்ணீரை நிக்க வை; நிக்கற தண்ணீரை பூமித்தாய் மடியில் உட்கார வை;’ என்று அந்தக் காலத்திலேயே நீர் மேலாண்மையை முன்னோர்கள் மிக அழகாக சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இதையே நாங்கள் தாரக மந்திரமாக கொண்டுள்ளோம். பாய்ந்தோடும் தண்ணீரைத் தடுத்து நிறுத்தி, குளம், குட்டைகளில் சேமித்து வைப்பதே நீர் மேலாண்மை.
கோவையில் சிறுதுளி அமைப்பு மூலம் நொய்யல் ஆற்றுப் படுகையில் உள்ள குளங்களைச் சீரமைத்து, நீர் மேலாண்மையை வலுப்படுத்தும் பணிகளைத் தொடர்ந்தோம். ஏறத்தாழ 25 நீர்நிலைகளை சுத்தப்படுத்துவது, தூர் வாருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டோம். இதனால், பல குளம், குட்டைகளில் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ளது. உக்குளத்தில் மேற்கொண்ட பணியால், 1,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இதேபோல, அனைத்து நீர்நிலைகளையும் உரிய முறையில் பராமரித்தால், தண்ணீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாணலாம். இது தொடர்பாக பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அந்தந்தப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைப் பராமரிக்கும் பொறுப்பை பொதுமக்களே ஏற்கச் செய்ய வேண்டும். இதையெல்லாம் மேற்கொண்டால் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையே இருக்காது” என்றார்.
நீர்மேலாண்மை அவசியம்!
மனுநீதி அறக்கட்டளைத் தலைவர் ஏ.மாணிக்கம் கூறும்போது, “மழை பெய்யும்போது அதை சேமிக்காமல் வீணாக்குவதும், பின்னர் `வறட்சி வறட்சி’ என குரல் எழுப்புவதும் வாடிக்கையாகிவிட்டது. தற்போது வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தாலும், பெருமளவு நீர் வீணாகிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. எனவேதான், நாங்கள் தொடர்ந்து நீர்மேலாண்மையை வலியுறுத்துகிறோம்.
மழையை இல்லாத பல நாடுகள், பிரமாதமான முறையில் விவசாயம் செய்யும்போது, போதுமான மழை கொண்ட நம் நாட்டில், தண்ணீரின்றி விவசாயம் பாதிக்கப்படுகிறது என்று கூறுவது ஏற்புடையதல்ல. எனவே, அனைத்து நீர்நிலைகளையும் தூர் வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேவையான இடங்களில் தடுப்பணைகளைக் கட்டி தண்ணீரைச் சேமிப்பதுடன், சேமித்து வைத்துள்ள தண்ணீரை உரிய முறையில் பயன்படுத்தி, வேளாண் சாகுபடிப் பணிகளை மேற்கொள்வது அவசியம்” என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் தீத்திபாளையம் பெரியசாமி கூறும்போது, “கோவையில் சொட்டையன் குளம், குனியமுத்தூர்குளம், வேடப்பட்டி குளம், நாகராஜபுரம் குளம் ஆகியவற்றில் வண்டல் மண் அள்ள அனுமதித்ததால், இக்குளங்களில் தற்போது தண்ணீர் தேங்கியள்ளது. அதேபோல, தேவராயன் குளம், வளையன்குட்டை, தீத்திபாளையம் குட்டை, கரடிமடை குளத்தை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தியதால், மழை காரணமாக நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
அதேசமயம், நொய்யல் ஆறு மற்றும் நீர்வழி வாய்க்கால்கள் பராமரிக்கப்படாததால், தண்ணீர் செல்ல வழியின்றி, அருகில் உள்ள பகுதிகளில் வெளியேறி வீணாகிவிட்டது. எனவே, நொய்யல் ஆற்றையும், நீர்வரத்து வாய்க்கால்களையும் தூர் வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரமைக்க வேண்டும். மாதம்பட்டி மேம்பாலம் தண்ணீரால் அரிக்கப்பட்டுள்ளது.
நரசிபுரத்தில் இருந்து வைதேகி செக்போஸ்ட் செல்லும் வழியில் உள்ள சிறு பாலம் உடைந்துவிட்டது. எனவே, பாலங்களின் அருகில் தடுப்புச் சுவர் அமைப்புதுடன், பாலங்களைப் பராமரிக்க வேண்டும். மேலும், நீர்நிலைகளின் குறுக்கே அமைக்கப்படும் பாலங்களின் பணிகளை மிகவும் தாமதமாக மேற்கொள்வதால், தண்ணீர் திசை திரும்பி, வீணாகிறது. எனவே, பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்” என்றார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!
கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கூறும்போது, ‘அனைத்து நீர்நிலைகளையும் தூர் வாரி, உரிய முறையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறும், கரைகளைப் பலப்படுத்துமாறும் பொதுப்பணித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழையை எதிர்கொள்ளவும், பாதிப்புகளைத் தடுக்கவும் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து, உரிய முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பவானி, நொய்யல் கரையோரப் பகுதி மக்களுக்கு உரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக தங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு மையம் மூலம், வெள்ள நிலவரம் கண்காணிக்கப்பட்டு, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து நீர்நிலைகளும் சீரமைக்கப்பட” என்றார்.