கோவை மாவட்டத்தில் தொடரும் கனமழை: சாலைகள் துண்டிப்பு, வீடுகளின் சுவர் இடிந்து சேதம், மக்கள் அவதி

ஆசாத் நகரில் தேங்கியுள்ள மழைநீர். படங்கள்: ஜெ.மனோகரன்.
ஆசாத் நகரில் தேங்கியுள்ள மழைநீர். படங்கள்: ஜெ.மனோகரன்.
Updated on
2 min read

கோவை \ பொள்ளாச்சி

கோவையில் தொடரும் கனமழை யின் காரணமாக, பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப் பட்டுள்ளன. வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது, பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

கோவையில் கடந்த 2 நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக உயர்ந்து வருகின்றன. தவிர, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக, பிரதான சாலைகள், உட்புறச்சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மழைநீர் தேங்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுவர் இடிந்து காயம்

மதுக்கரை அறிவொளி நகரைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (65). மழை காரணமாக, இவரது வீட்டின் சுவர் நேற்று இடிந்து விழுந்தது. இதில் ஜார்ஜ், அவருடன் தங்கியிருந்த உறவினர் ஆறுமுகம் (65) ஆகியோர் காயமடைந்தனர். பூமார்க்கெட் நன்னெறிக் கழகம் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜினி (85). இவரது வீட்டு சுவர் நேற்று இடிந்தது.

இடிபாடுகளில் சிக்கிய சரோஜினியை போலீஸார் மீட்டனர். போத்தனூர், மேட்டூர் அண்ணாபுரம் அருகேயுள்ள 2 பேரின் வீடுகளும் கனமழையால் நேற்று இடிந்தன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சிங்காநல்லூர் வீட்டுவசதி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விழுந்தது. கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகரில் உள்ள சரஸ்வதி என்பவரின் வீட்டு சுவரும் நேற்று இடிந்தது. ஆவாரம்பாளையம் பட்டாளம்மன் கோயில் வீதியை சேர்ந்த சம்பத் என்பவரது வீட்டு சுவரும் நேற்று இடிந்தது.

செல்வபுரத்தில் இருந்து தெலுங்குபாளையம் பிரிவு வழியாக பேரூருக்கு பிரதான சாலை செல்கிறது. இச்சாலையில் தெலுங்குபாளையம் பிரிவில் இருந்து பேரூர் எல்லை தொடங்கும் ஆண்டிபாளையம் பிரிவு வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையில் மழைநீர் தேங்கியது. இதில், அங்குள்ள செல்வபுரம் காவல்நிலையத்தின், புறக்காவல் நிலையத்திலும் மழைநீர் புகுந்தது. மழைநீர் தேங்கியதை தொடர்ந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூருக்கு செல்லும் சாலையில் நொய்யலாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தை கடந்து நேற்று மழைநீர் சென்றதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஒண்டிப்புதூர் - பட்டணம் சாலையில் உள்ள தரைப்பாலமும் நீரில் மூழ்கியதால், அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சூலூர் அருகே ராவத்தூரில் உள்ள நொய்யல் ஆற்றின் தரைப்பாலம், வெள்ளப்பெருக்கின் காரணமாக நேற்று அடித்துச் செல்லப்பட்டது. இதனால் ராவத்தூரில் இருந்து திருச்சி சாலைக்கும், திருச்சி சாலையில் இருந்து ராவத்தூருக்கும் செல்ல முடியாமல் மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

வீடுகளை சூழ்ந்த மழைநீர்

பேரூர் அருகே, நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள ஆத்துமேட்டில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

நொய்யலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், ஆத்துமேடு குடியிருப்புப் பகுதிக்குள் நேற்று மழைநீர் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் அவர்கள் தவித்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தினர் கயிறு கட்டி அங்கு இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 55 பேரை மீட்டனர். உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் உள்ள கரும்புக்கடை ஆசாத் நகர் 2-வது வீதி, 6-வது வீதி, 9-வது வீதிகளில் உள்ள வீடுகளில் நேற்று மழைநீ்ர் புகுந்தது. தகவலறிந்த கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தினர், சம்பவ இடத்துக்கு சென்று 22 குடும்பங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரை மீட்டனர். செல்வ புரம் எஸ்.ஏ. கார்டன், எல்.ஐ.சி. காலனி, அதற்கு அருகே உள்ள பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால், மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். ஒண்டிப்புதூர் காமாட்சிபுரத்தில், நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள அம்பேத்கர் நகர், நொய்யல் வீதியில் உள்ள வீடுகளுக்குள் நேற்று காலை மழைநீர் புகுந்தது. மாவட்ட நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு இருந்த சுமார் 500 பேரை மீட்டு அருகே யுள்ள பள்ளி வளாகத்தில் தங்க வைத்தனர்.

மீட்புக்குழு வருகை

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை தொடர்ந்து, அங்கு கண்காணிப்பு பணியை மேற்கொள்ள பேரிடம் மீட்புக் குழுவினர் 130 பேர் வந்துள்ளனர். இக்குழுவினர் பவானி ஆற்றங்கரையோரம் பாது காப்பு மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட உள்ளனர். சுங்கம் அருகே யுள்ள சண்முகா நகர், கோவை - திருச்சி சாலை நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அருகே, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள மரங்கள் சரிந்து சாலையில் விழுந்தன. தீயணைப்புத் துறையினர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று காலை வரை விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பொள்ளாச்சியில் ஒரே நாளில் 212 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. பொள்ளாச்சியை சுற்றியுள்ள மலையடிவார பகுதிகளில் தீவிர மழைப்பொழிவு இருந்ததால், பள்ளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த 2 நாட்களாக அர்த்தநாரிப்பாளையம் வனப்பகுதியில் பெய்த கனம ழையால் மாடேத்தி பள்ளம், ஆலாங்கண்டி பள்ளங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியதால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாலாற்றின் கரையில் உள்ள சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. கோயிலுக்கான தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. பாதுகாப்பு கருதி கோயில் நடை சாத்தப்பட்டு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in