

ச.கார்த்திகேயன்
சென்னை
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் வரலாறு காணாத வகையில் 2 நாட்களில் 82 செ.மீ., 91 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. உண்மையிலேயே அந்த அளவுக்கு மழை பெய்ததா என்பது சந்தேகமாக இருப்பதால், அங்கு உள்ள மழைமானியை ஆய்வு செய்ய வானிலை மையம் திட்டமிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக, அங்கு உள்ள அவலாஞ்சி பகுதியில் கடந்த 5, 6, 7, 8 தேதிகளில் முறையே 21 செ.மீ., 41 செ.மீ., 82 செ.மீ., 91 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் 552 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். அதிகனமழை காரணமாக 632 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த 9 நாட்களில் மட்டும் 392 மி.மீ. மழை அதிகமாக கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 14 சதவீதம் அதிகம்.
இதற்கிடையில் அவலாஞ்சியில் பதிவான மழைப்பொழிவு விவரம் சரிதானா என்று வானிலை ஆய்வு மையத்துக்கு சந்தேகம் எழுந்துள்ளது. வழக்கமாக ஓர் இடத்தில் பதிவாகும் வெப்பநிலை அல்லது மழை அளவு, அதை சுற்றியுள்ள பகுதி களில் பதிவாகும் அளவைவிட சற்று ஏற்ற இறக்கத் துடன் இருப்பது வழக்கம். ஆனால் அவலாஞ்சிக்கு அருகே உள்ள மேல்பவானியில் 45 செ.மீ., தேவாலாவில் 26 செ.மீ. பதிவாகியுள்ள நிலையில், அவலாஞ்சியில் மட்டும் 91 செ.மீ. எப்படி பதிவாகும் என்று வானிலை மையம் சந்தேகிக்கிறது.
புதுச்சேரியில் கடந்த ஜனவரி 4-ம் தேதி குறைந்த பட்ச வெப்பநிலையாக மிக மிக குறைவாக 16.5 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது. ஆனால், அருகே உள்ள கடலூர், விழுப்புரம் போன்ற இடங் களில் குறைந்தபட்ச வெப்பநிலை இவ்வளவு குறைவாக இல்லை. இதேபோல, வால்பாறையிலும் குறைந்தபட்ச வெப்பநிலை சுற்றுப் பகுதிகளைவிட மிகமிக குறைவாக பதிவாகி இருந்தது.
இதையடுத்து, ஆய்வு நடத்தப்பட்டதில், வானிலை மையம் சார்பில் புதிதாக வாங்கப்பட்ட வெப்பமானிகள் சரியாக வேலை செய்யவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல, தற்போது அவலாஞ்சியில் உள்ள மழைமானியில் குறைபாடு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் கூறியதாவது:
மும்பையில் கடந்த 2005-ம் ஆண்டு 96 செ.மீ. மழை பெய்தது. இந்திய அளவில் அதிகபட்ச மழை அளவாக இது கருதப்படுகிறது. தமிழக அளவில் அதிகபட்சமாக 1943 மே 18-ம் தேதி, புயல் கரையைக் கடந்தபோது, கடலூரில் 57 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கத்தில் அதிகபட்சமாக 47 செ.மீ. மழை பதிவானது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிகபட்சமாக 40 செ.மீ.தான் மழை பெய்துள்ளது. 80 செ.மீ., 90 செ.மீ. அளவுக்கு பெய்ததில்லை.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிகனமழை பெய்து வருவது உண்மை. இன்னும் சில நாட்களுக்கு இது நீடிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த அளவுக்கு பெய்யுமா என சந்தேகம் உள்ளது. அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் அந்த அளவுக்கு மழை இல்லை.
அவலாஞ்சியில் உள்ள மழைமானி, தமிழக அரசால் நிறுவப்பட்டது. அதை பராமரிப்பது வானிலை மையம் அல்ல. எனவேதான் அந்த மழைமானி முறை யாக செயல்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட உள்ளது. அதன் பின்னரே தமிழகத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழையாக இதை ஏற்க முடியும். இந்த மழை அளவை உறுதி செய்ய புணேயில் உள்ள வானிலை ஆய்வு மையத்தின் உதவியும் கோரப் பட்டுள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதுதொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபாலிடம் கேட்டபோது, ‘‘நீலகிரியில் அதிகனமழை பெய்யும் என்று வானிலை மையமே எச்சரித்துள்ளது. மழையும் பெய்து வருகிறது. எனவே, மழைமானியில் குறை இல்லை’’ என்றார்.