

சென்னை
சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், தடையை மீறி பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதக் குவளைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அமலில் உள்ளது.
தற்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தாலோ, வைத்திருந்தாலோ, பயன்படுத்தினாலோ அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட 14 வகையான பொருட்களில் பிளாஸ்டிக் பூசப் பட்ட காகிதக் குவளைகளும் அடங்கும்.
சென்னை மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறி்த்து சோதனையிட அதிகாரம் பெற்ற அமைப்புகளாக சென்னை மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோயம்பேடு சந்தை நிர்வாகம் ஆகியவை உள்ளன. ஆனால் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் அமைப்பாக சென்னை மாநகராட்சி மட்டுமே உள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகம் ஆகியவற்றில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தடையை மீறி பிளாஸ்டிக் பூசப் பட்ட காகிதக் குவளைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன. பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தக்கூடிய அரசு அமைப்புகளே விதிகளை மீறுவ தாக பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “மாநக ராட்சி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் கள் பயன்படுத்துவது தொடர் பாக இதுவரை புகார்கள் ஏதும் வரவில்லை. சென்னை மாநக ராட்சி மற்றும் ஆட்சியர் அலுவல கங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தடுக்கப்படும்" என்றனர்.