Published : 09 Aug 2019 05:30 PM
Last Updated : 09 Aug 2019 05:30 PM
வேலூர்
வேலூர் மக்களவைத் தொகுதித் தேர்தலில் நோட்டாவுக்கு 9,417 வாக்குகள் பதிவாகியுள்ளன.
வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பாக கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர். நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி போட்டியிட்டார். கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி நிலவரப்படி, இத்தொகுதியில் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே அதிமுக முன்னிலை வகித்தது. திமுக இரண்டாம் இடத்திலும், நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்திலும் வகித்தது.
ஆனால், ஏழாவது சுற்றில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலைக்கு நகர்ந்தார். இறுதிச்சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,119 வாக்குகளைப் பெற்றார். இருவருக்கும் இடையே உள்ள வாக்குகள் வித்தியாசம் 8,141. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகளைப் பெற்றார்.
திமுக 47.3% வாக்குகளையும், அதிமுக 46.51% வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 2.63% வாக்குகளையும் பெற்றது.
இந்நிலையில், நோட்டாவுக்கு 9,417 வாக்குகள் பதிவாகியுள்ளன. இது, 0.92 சதவீதமாகும். திமுக வேட்பாளருக்கும் அதிமுக வேட்பாளருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 8,141 ஆக உள்ளது. வாக்கு வித்தியாசத்தைவிட, நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.