

உதகை
நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்தை விட 25 சதவீதம் கூடுதலாக மழை பெய்து வருவதால், முழுவீச்சில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று ஆய்வு செய்தார். உதகை அருகேயுள்ள முத்தோரை பாலாடா பகுதியில் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிட்ட அவர், ஓம்பிரகாஷ் பள்ளியில் உள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ளவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகப் பெய்து வரும் மழை காரணமாக முதல்வர் உத்தரவின் பேரில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் இரு தினங்கள் மழை இருக்கும் என்பதால் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் இங்கு முகாமிட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் 4 வட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. குந்தா வட்டத்தில் ஒரு நபரும், உதகை வட்டத்தில் 3 பேரும் என 4 பேர் உயிரிழந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 233 பகுதிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மிக அதிகமாக 23 இடங்களும், அதிகமாக 80 இடங்களும், மிதமாக 130 இடங்களும் பாதிக்கப்பட்ட இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 35 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலப் பேரிடர் மீட்புக் குழு, தேசிய பேரிடர் மீட்பு, ஆயுதப்படை, தீயணைப்புப் படை என மொத்தம் 491 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குந்தா, கூடலூர், உதகை, பந்தலூர் ஆகிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மொத்தம் 155 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, 26 நிவாரண மையங்கள் தொடங்கப்பட்டு, அதில் 157 குடும்பத்திலிருந்து 1,706 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்பினால் 2,400 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் நிவாரண முகாம்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்மழை பகுதிகளாக இருக்கும் இடங்களில் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இறந்தவர்களுக்கும், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரண நிதி வழங்கப்படும். முதல்வர் உத்தரவிட்ட பின் உதவிகள் அவர்களுக்கு வழங்கப்படும். நிலச்சரிவு அதிகமான இடங்களில் இருக்கிறது. இதைச் சரிசெய்ய இரவு, பகல் பாரமல் அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பொதுமக்கள் அச்சப்படவோ, பீதியடையவோ தேவையில்லை. வருவாய் நிர்வாக ஆணையர், கூடுதல் அலுவலர்களை உதகைக்குக் கொண்டு வர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இரவு நேரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வேண்டும். தண்ணீர் ஓடும் இடங்களில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். அங்கு சென்று செஃல்பி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் தொடர் மழை இருப்பதால் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வேண்டும். ஆதாரப்பூர்வமற்ற தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவார்கள். மக்கள் அதை நம்பக் கூடாது.
மனித உயிரிழப்பு, பொருள், விவசாய சேதம் இல்லாமல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட 25 சதவீதம் கூடுதலாக நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது. சுற்றுலா வருபவர்கள் சூழ்நிலை கருதி முடிவெடுக்க வேண்டும்''.
இவ்வாறு அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
ஆய்வின் போது வருவாயத்துறை நிர்வாக ஆணையர் சத்யகோபால், மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.