Published : 09 Aug 2019 03:19 PM
Last Updated : 09 Aug 2019 03:19 PM

வேலூர் தேர்தல்: வெற்றி முகம் நோக்கி கதிர் ஆனந்த்

வேலூர்

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில், 9,723 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ள திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வெற்றி உறுதியாகியுள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பாக கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர். நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி போட்டியிட்டார். கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி நிலவரப்படி, இத்தொகுதியில் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து, மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதன்படி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில், அதிமுக 25,719 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தது. திமுக 24,806 வாக்குகள் பெற்றிருந்தது. நாம் தமிழர் கட்சி 1269 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் இருந்தது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே அதிமுக முன்னிலை வகித்தது. தபால் வாக்குகளில் அதிமுக 363 வாக்குகளும், திமுக 200 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 17 வாக்குகளும் பெற்றிருந்தன.

முதல் சுற்றின்படி, அதிமுக 25,719 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், 24,806 வாக்குகள் பெற்று திமுக இரண்டாம் இடமும், நாம் தமிழர் கட்சி 1269 வாக்குகளுடன் மூன்றாம் இடமும் வகித்தன. அதிமுக வாக்குகள் அடுத்தடுத்த சுற்றுகளில் படிப்படியாக உயர்ந்து, ஆறாவது சுற்றில் 5,227 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக ஒரு லட்சத்து 57,773 வாக்குகளுடன் முன்னிலை வகித்தது. அப்போது, திமுக ஒரு லட்சத்து 52,546 வாக்குகள் பெற்றது.

ஆனால், ஏழாவது சுற்றில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலைக்கு நகர்ந்தார். திமுக ஒரு லட்சத்து 81,331 வாக்குகளும், அதிமுக ஒரு லட்சத்து 80,715 வாக்குகளையும் பெற்றன. கதிர் ஆனந்த் 616 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

இதையடுத்து அடுத்தடுத்த சுற்றுகளில், கதிர் ஆனந்த் வாக்குகள் அதிகம் பெற்று 14 ஆவது சுற்றில், 20,350 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். 19 ஆவது சுற்றின் முடிவில், 9723 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார். அனைத்து சுற்று வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், கதிர் ஆனந்தின் வெற்றி உறுதியாகியுள்ளது. எனினும், அவருடைய வெற்றி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

கதிர் ஆனந்த் வெற்றி பெறும் சூழலில் உள்ளதால், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x