தொடர் மழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு; பொதுமக்கள் மகிழ்ச்சி

தொடர் மழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு; பொதுமக்கள் மகிழ்ச்சி
Updated on
1 min read

கோவை

கோயம்புத்தூரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணை, கோவையின் முக்கிய நீராதாரமாக உள்ளது. சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் நீர் வழியோரமுள்ள 22 கிராமங்கள் மற்றும் கோவை மாநகராட்சியின் 26-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

சிறுவாணி அணைப் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை தீவிரமடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சிறுவாணி அணையில் 350 மி.மீ அளவுக்கும், அடிவார நீர்ப்பிடிப்பு பகுதியில் 180 மி.மீ அளவுக்கும் மழை பெய்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சிறுவாணி அணையில் 300 மி.மீ. அளவுக்கும், அடிவார நீர்ப்பிடிப்பு பகுதியில் 101 மி.மீ. அளவுக்கும் மழை பெய்துள்ளது. இன்றைய நிலவரப்படி சிறுவாணி அணையில் இருந்து 39.98 எம்.எல்.டி நீர் எடுக்கப்பட்டுள்ளது.

சிறுவாணி அணையின் மொத்தக் கொள்ளளவு 49.50 அடி ஆகும். தற்போதைய நிலவரப்படி சிறுவாணி அணையில் 41.98 அடி அளவுக்கு நீர்மட்டம் உள்ளது. தொடர் மழையின் காரணமாக சிறுவாணி அணை வேகமாக நிரம்பி வருகிறது.

தென்மேற்குப் பருவ மழையின் தொடக்க காலத்தில் சிறுவாணி அணை மற்றும் அடிவாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுவாணி அணை மற்றும் அடிவாரப் பகுதியில் மழை பெய்வது அதிகரித்துள்ளதாலும், அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும் கோவை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in