Published : 09 Aug 2019 01:02 PM
Last Updated : 09 Aug 2019 01:02 PM

வேலூர் தேர்தல்: 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலை

கதிர் ஆனந்துக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின்: கோப்புப்படம்

வேலூர்

வேலூர் மக்களவைத் தொகுதித் தேர்தலில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 14,214 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பாக கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர். நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி போட்டியிட்டார். கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி நிலவரப்படி, இத்தொகுதியில் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து, மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதன்படி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில், அதிமுக 25,719 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தது. திமுக 24,806 வாக்குகள் பெற்றிருந்தது. நாம் தமிழர் கட்சி 1269 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் இருந்தது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே அதிமுக முன்னிலை வகித்தது. தபால் வாக்குகளில் அதிமுக 363 வாக்குகளும், திமுக 200 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 17 வாக்குகளும் பெற்றிருந்தன.

முதல் சுற்றின்படி, அதிமுக 25,719 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், 24,806 வாக்குகள் பெற்று திமுக இரண்டாம் இடமும், நாம் தமிழர் கட்சி 1269 வாக்குகளுடன் மூன்றாம் இடமும் வகித்தன. அதிமுக வாக்குகள் அடுத்தடுத்த சுற்றுகளில் படிப்படியாக உயர்ந்து, ஆறாவது சுற்றில் 5,227 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக ஒரு லட்சத்து 57,773 வாக்குகளுடன் முன்னிலை வகித்தது. அப்போது, திமுக ஒரு லட்சத்து 52,546 வாக்குகள் பெற்றது.

ஆனால், ஏழாவது சுற்றில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலைக்கு நகர்ந்தார். திமுக ஒரு லட்சத்து 81,331 வாக்குகளும், அதிமுக ஒரு லட்சத்து 80,715 வாக்குகளையும் பெற்றன. கதிர் ஆனந்த் 616 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

8 ஆவது சுற்றிலும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 2 லட்சத்து 8,831 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் 2 லட்சத்து 6,133 வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார். இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம் 2,698 வாக்குகள்.

9-வது சுற்றின்படி, திமுக வேட்பாளர் 2 லட்சத்து 36,836 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் 2 லட்சத்து 30,645 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் 12,569 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் 6,191 வாக்குகள்.

10 ஆவது சுற்றின்படி, திமுக 2 லட்சத்து 63,354 வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலை வகித்தது. அதிமுக 2 லட்சத்து 56,137 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 14,265 வாக்குகளும் பெற்றன.

11 ஆவது சுற்று நிலவரப்படி, திமுக 2 லட்சத்து 92,541 வாக்குகள் பெற்று, அதிமுகவை விட 14,214 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. அதிமுக 2 லட்சத்து 78,327 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 15,647 வாக்குகளும் பெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x