

உதகை
நீலகிரியில் தொடர் மழை காரணமாக 4 பேர் உயிரிழந்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், இத்தலார், எமரால்டு, அட்டுபாயில், பாலாடா மற்றும் அவலாஞ்சி போன்ற பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழைச் சேதங்களைப் பார்வையிட வந்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வை முடித்துத் திரும்பும்போது, பாலாடா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சாலையில் வெள்ளம் ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் எடக்காடு, குந்தா, கைகாட்டி வழியாக உதகை செல்ல முற்பட்டபோது, குந்தா பாலம் அருகே ஒரு வளைவில் மூன்று கற்பூர மரங்கள் ஒரே இடத்தில் சாலையின் குறுக்கே விழுந்தது. மரங்கள் அகற்றிய பின் ஒரு மணி நேரம் தாமதமாகக் கிளம்பினார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் கூறும் போது, ''நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால், உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளன. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தற்போது மாவட்டம் முழுவதும் 2,100 பேர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 2,000 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புக்குழு வரவழைக்கப்பட்டுள்ளது.
மேலும், கூடலூர் பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள குன்னூர் வெலிங்டன் ராணுவத்தை நாடியுள்ளோம். 25 ராணுவ வீரர்கள் கூடலூர் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். மேலும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கப் படகுகளைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான படகுகள் கொண்டு வரப்படவுள்ளன'' என்றார்.