Published : 09 Aug 2019 12:16 PM
Last Updated : 09 Aug 2019 12:16 PM

பொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்துவிட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: தமிழிசை கருத்து

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இருவர் இடையிலான வார்த்தை மோதல் குறித்து, தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''தமிழகத்தைப் பொறுத்தவரையில் வைகோவும் கே.எஸ்.அழகிரியும் சண்டை போட ஆரம்பித்துள்ளனர். மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்படும் வரை எதையுமே பேசாமல், தேர்வு செய்யப்பட்ட பிறகு காங்கிரஸைக் குறை கூறுகிறார் வைகோ. அவர் கூறுவதிலும் சில கருத்துகள் இருக்கின்றன. அழகிரி சொல்வதிலும் சில கருத்துகள் உள்ளன.

ஆக, பொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்தார்கள். இன்று மறுபடியும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் உடனே, இதன் பின்னணியில் பாஜக இருக்கிறது என்று குறை சொல்வதை, சுட்டிக் காண்பிப்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன். நேர்மறை அரசியலில்தான் பாஜகவுக்கு விருப்பம் உள்ளது'' என்று தெரிவித்தார் தமிழிசை.

காஷ்மீர் விவகாரத்தில் மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினர் வைகோ பேசும்போது, காங்கிரஸையும் குற்றம் சாட்டி விமர்சித்தார். அதற்கு பதிலளிக்கும் விதத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் வைகோவை கடுமையாக விமர்சித்த அழகிரி, வைகோ ஓர்அரசியல் சந்தர்ப்பவாதி எனவும் கூறியிருந்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பேசிய வைகோ, ''ஒரு இனத்தையே அழித்த பாவிகள் காங்கிரஸ்காரர்கள். காங்கிரஸ் தயவால் நான் போட்டியிட்டதில்லை, அப்படி செய்யவும் மாட்டேன்'' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x