Published : 09 Aug 2019 11:19 AM
Last Updated : 09 Aug 2019 11:19 AM

மதுரை மாநகராட்சியில் நிதிப்பற்றாக்குறையால் முடங்கிய கொசு ஒழிப்பு: கொசு உற்பத்தி தொழிற்கூடமாக மாறிய மழைநீர் கால்வாய்கள்

மதுரை மாநகராட்சியில் நிலவும் நிதிப் பற்றாக்குறையால் கொசு ஒழிப்பு திட்டம் முடங்கியுள்ளது. இதனால் கழிவு நீர் கால்வாய்கள், மழை நீர் கால்வாய்கள் கொசுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்களாக மாறிவிட்டன.

கொசுக்கள் அதிகரித்ததால், இரவு மட்டுமில்லாது பகல் பொழுதிலும் மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் மக்கள் தொகை 20 லட்சத்தை நெருங்கி விட்டது. மக்கள் சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை மற்றும் குப்பை வரி முறையாக கட்டினாலும் சாலை, குடிநீர், தெருவிளக்கு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.

குறிப்பாக புறநகரில் உள்ள 28 வார்டுகளில் மாநகராட்சி சுகாதாரத்துறை கவனம் செலுத்ததால் லேசான மழை பெய்தாலே தொற்றுநோய்கள், வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவுகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் டெங்கு, வைரஸ், சிக்கன்குன்யா மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

முன்பு மாநகரப்பகுதி வார்டுகளில் கொசு ஒழிப்புத் திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டது. குடியிருப்புப் பகுதிகள், முக்கிய சாலைகளில் வாகனங்களில் சென்று மாநகராட்சி துப்புரவுப்பணியாளர்கள் கொசு மருந்து அடிப்பார்கள்.

ஒரளவு கொசுக்கள் உற்பத்தி கட்டுக்குள் இருந்தது. ஆனால், தற்போது கொசு ஒழிப்பு பணியே நடக்கவில்லை. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பஸ்நிலையங்கள், ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் கோயில்கள், முக்கிய சாலைகளில் கூட கொசு ஒழிப்புப் பணி பெயரளவுக்கே கண்துடைப்பு நடவடிக்கையாகவே நடக்கிறது.

அதேபோல், மாநகராட்சிப்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய், கழிவு நீர் கால்வாய்களில் அனைத்தும் கழிவு நீர் நிரந்தரமாக தேங்கி நிற்கிறது. அதில், குப்பைகளும் கொட்டப்படுவதால் இந்த கால்வாய்கள் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகள், பொதுவழிச்சாலைகள் தூர்நாற்றம் வீசுகின்றன.

உதாரணமாக கே.புதூர் சிப்காட் கால்வாய், டிஆர்ஓ காலனி கால்வாய், செல்லூர், எஸ்.எஸ்.காலனி உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் கழிவு நீர் மற்றும் மழைநீர் கால்வாய்களில் நிரந்தரமாகவே சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.

தற்போது கோடை வெப்பம் குறைந்து அவ்வப்போது மழைதூறல் பெய்து இதமான சூழ்நிலை காணப்படுவதால் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகின்றன. இந்த வகை கொசுக்கள் தடிமனாக உள்ளன. இவை பகல் பொழுதிலும் கடிக்கின்றன.

பொதுவாக பகல் பொழுதில் டெங்கு கொசுக்களே அடிக்கும். ஆனால் தற்போது வரை டெங்கு காய்ச்சல் பரவாததால், மாநகராட்சி கொசு ஒழிப்பில் அலட்சியமாக உள்ளது. அதனால், அலுவலகங்கள், வீடுகளில் ஏசி அறைகளிலே கொசு தொல்லை தாங்க முடியவில்லை.

நோயாளிகள் அவதி:

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பகல், இரவு நேரங்களில் கொசுக்களில் நோயாளிகள் பரிதவிக்கின்றனர். இரவில் உள் நோயாளிகள், தூங்க முடியாமல் மன உளச்சலுக்கு ஆளாகின்றனர். அதுவே, அவர்களுக்கு நோய் தீவிரமடைவதற்கும் முக்கிய காரணமாகிவிடுகிறது. வீடுகளில் மின்தடை ஏற்பட்டால் மக்கள் தூக்கத்தை தொலைத்துவிடுகின்றனர்.

மாநகராட்சி சுகாதாரத்துறை ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சல், வைரஸ் காயச்சல் தீவிரமடையும்போது மட்டுமே சுகாதார களப்பணியில் ஈடுபடுகின்றனர். அதன்பிறகு அவர்களால் டெங்கு மற்றும் தொற்று நோயை கட்டுப்படுத்த மட்டுமே முடிகிறது. உயிர் பலியையும், பரவுவதையும் தடுக்க முடியவில்லை. அதனால், மதுரையில் கொசுத் தொல்லை நிரந்தமாகிவிட்ட நகரமாக மாறியுள்ளது.

3 ஆண்டுகளாக நிரந்தர அதிகாரிகள் இல்லை..

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாகவே மாநகராட்சி சுகாதாரத்துறை நிரந்தரமான சுறுசுறுப்பான சுகாதார அதிகாரிகள் இல்லாமல் தடுமாறி வருகிறது. தற்போது தூத்துக்குடியில் இருந்து வந்த புதிய சுகாதாரத்துறை அதிகாரியும் கொசு உற்பத்தியைத் தடுக்கவும், ஒழிக்கவும் துரித நடவடிக்கை எடுக்கவில்லை.

மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் கொசு ஒழிப்புத் திட்டம் தற்போது செயல்படுகிறதா? என்பதே தெரியவில்லை. கொசு மருந்து அடிக்க வண்டிகள் குறைவாக உள்ளது.

கொசு மருந்துகள் வாங்க நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. "லார்வா' பருவ கொசுக்கள் ஒழிக்கும் திட்டமும் நிதிநிலை காரணமாக பெயரளவில் செயல்படுத்தப்படுவதால் கொசு உற்பத்தியை மாநகராட்சியால் தடுக்க முடியவில்லை. கழிவு நீர் கால்வாய்கள் அனைத்தும் பட்டவர்த்தனமாக கொசுக்களை உற்பத்தி செய்யக்கூடிய தொழில்கூடமாக மாறிவிட்டன.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகனிடம் கேட்டபோது, "கொசு மருந்துகள் தற்போது வாங்கப்பட்டுவிட்டது. ஒவ்வொரு மண்டலம் வாரியாக எந்தெந்த பகுதியில் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகின்றன, கழிவு நீர் தேங்கும் மழைநீர் மற்றும் கழிவு நீர் கால்வாய்களை கண்டறிந்து கொசு உற்பத்தியாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x