Published : 09 Aug 2019 09:59 AM
Last Updated : 09 Aug 2019 09:59 AM

மழைநீரைப் பயன்படுத்தி தின்பண்டங்கள் தயாரிப்பு

எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்

தமிழகத்தில் சமீப ஆண்டுகளாகப் பருவமழை குறைந்து வறட்சி நிலவுவதால், நீர்நிலைகளும், நிலத்தடி நீர்மட்டமும் வறண்டு, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருவாரூரில் உள்ள ஒரு தனியார் இனிப்பகத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கி, அதில் சேகரகமாகும் நீரைப் பயன்படுத்தியே இனிப்பு, கார வகை திண்பண்டங்களை தயாரிக்கின்றனர். மேலும், கடைக்கு வருகின்ற வாடிக்கை யாளர்கள் பருகுவதற்கும் மழைநீரையே கொடுக்கின்றனர்.

இதற்காக அந்தக் கடையின் கீழ்த்தளத்தில் மழைநீரை சேமிப்பதற்காக 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஷம்பு(குடிநீர் சேமிப்புத் தொட்டி) அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர்த் தேக்கத் தொட்டியின் மேற்பகுதியில், இயற்கை முறையில் தண்ணீரை சுத்திகரிக்கும் வகையில் மணல், கூழாங்கற்கள் ஆகியவற்றைக்கொண்டு நிரப்பப்பட்ட ஒரு வடிகட்டி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் வழியாகத்தான் மழைநீர் உள்செலுத்தப்பட்டு, பின்னர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீராகச் சேமிக்கப்படுகிறது.

இந்த குடிநீர்த் தொட்டியிலிருந்து தண்ணீர் கசியாமல் இருக்க, காற்று புகாமல் தடுக்க, பூமியில் நிலவும் வெப்பம் தண்ணீரைப் பாதிக்காமல் இருக்க லீக் புரூப், ஹீட் புரூப், கேஸ் புரூப் ஆகியவற்றை காங்கிரீட், தெர்மாகோல், செங்கல் சுவர், டைல்ஸ் கொண்டு வடிவமைத்துள்ளனர். தலா ஒன்றரையடி அகல சுவருடன்கூடிய, 7 லேயர்களால் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இனிப்பகத்தின் உரிமையாளர் ராகுல் கூறியதாவது:

மறைந்த சமூக ஆர்வலர் மழைநீர் வரதராஜன் கொடுத்த ஆலோசனையின்படியே இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்நாள் பெய்கின்ற மழைநீரில் மேற்கூரையில் உள்ள அசுத்தங்களும் சேர்ந்து வரும் என்பதால், அந்த நீரை வெளியேற்றும் அமைப்பு மூலம் நேரடியாக வெளியேற்றிவிடுவோம். மழை பெய்யும் 2-வது நாளிலிருந்துதான், மழைநீரை சேகரிப்போம். இந்த மழைநீர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, 2 ஆண்டுகளாகிறது.

இதுவரை நாங்கள் சேமித்து வைத்துள்ள மழைநீரைத் தான் குடிக்கவும், பண்டங்கள் தயாரிக்கவும் பயன்படுத்தி வருகிறோம். வேறு தண்ணீரைப் பயன்படுத்துவதில்லை. முன்பைவிட மழைநீரைப் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர் தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகைகளின் சுவை சற்று கூடியிருப்பதுடன், கூடுதலாக 2 நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கின்றன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x