

திருப்பூர்
திருப்பூர் நொய்யலாற்றில் வெள்ளப் பெருக்கு காரணமாக அணைப்பாளையம் பகுதியில் மங்களம் சாலை - கல்லூரிச் சாலையை இணைக்கும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மாநகரப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, திருப்பூர் மாவட்டப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது. இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மாநகரின் காலேஜ் ரோடு, நெசவாளர் காலனி, கணியாம்பூண்டி ரயில்வே தரைப்பாலம் உள்ளிட்ட பல பகுதிகள் தண்ணீர் தேங்கி நின்று குளமாக மாறியது.
அதேபோல், பல்வேறு பகுதியில் இரவு மின்சாரம் பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் நேற்று இரவு மின்சாரம் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், மாநகரின் கொங்கு மெயின் ரோடு உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மரம் சாய்ந்து, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், மாநகரப் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை முறையாகப் பராமரிக்காததால் மழை நீர் தேங்கி நின்றது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு:
திருப்பூர் வடக்கு 44 (மி.மீ),
அவிநாசி 45 (மி.மீ),
மூலனூர் 27 (மி.மீ),
பல்லடம் 59 (மி.மீ),
காங்கயம் 29.10 (மி.மீ),
தாராபுரம் 40 (மி.மீ),
திருமூர்த்தி அணை 130 (மி.மீ),
அமராவதி அணை 68 (மி.மீ),
உடுமலை 70 (மி.மீ) என மொத்தம் 512 மி.மீ. மழை பெய்தது.
மற்ற இடங்களில் மழை பதிவாகவில்லை என பேரிடர் மேலாண்மைத்துறையினர் தெரிவித்தனர்.