இன்று உலக பழங்குடிகள் தினம்: 2 வாரத்துக்கு ஒரு பழங்குடியின மொழி அழிவதாக அதிர்ச்சி தகவல்

இன்று உலக பழங்குடிகள் தினம்: 2 வாரத்துக்கு ஒரு பழங்குடியின மொழி அழிவதாக அதிர்ச்சி தகவல்
Updated on
2 min read

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

உலக பழங்குடிகள் தினம் இன்று (ஆக.9) கொண்டாடப்படும் நிலை யில், உலகில் 2 வாரத்துக்கு ஒரு பழங்குடியின மொழி அழிவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

1982-ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை ஆக.9-ம் தேதியை பழங்குடிகள் தினமாக கடைபிடித்து வருகிறது. பழங்குடிகள் குறித்தும், அவர்களின் உரிமைகள் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்து வதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு இந்த தினம் கொண் டாடப்படுகிறது.

இந்த ஆண்டு பழங்குடியின மொழிக்கான சர்வதேச ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெருவாரி யாக அழியும் நிலையிலுள்ள மொழி களைப் பேசுவது பழங்குடியினரே. 2 வாரத்துக்கு ஒரு பழங்குடியின மொழி அழிவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் அவர்களது கலாச்சாரமும், பாரம்பரியமும் அழியும் விளிம்பில் உள்ளன.

மொழிகள் என்பது கருத்துப் பரிமாற்றக் கருவியாகவும், அன்றாட மனித வாழ்வில் முக்கிய அங்கமாகவும் உள்ளது. ஒரு மொழி அந்த மொழி பேசும் மனிதர்களின் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கும் உதவுகிறது. மொழிகளுக்கு இவ்வளவு முக்கி யத்துவம் இருப்பினும் பல்வேறு காரணங்களால் அவை வேகமாக அழிந்து வருகின்றன. இதில் பழங் குடியின மொழிகளே வேகமாக அழிகின்றன.

இதுகுறித்து பழங்குடியின மக்கள் வாழ்வுரிமைக்காக பாடு படும் ஏக்தா பரிஷத் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தன் ராஜ் கூறியதாவது: இந்தியாவில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி பழங்குடியினர் சுமார் 104,545,716 பேர் உள்ளனர்.

உலகில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமான பழங்குடியினர் இந்தியாவில் வாழ் கின்றனர். தமிழகத்தில் 36 பட்டி யல் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சுமார் 71.50 லட்சம் பேர் வசிக்கின்றனர்.

உலகில் 2 வாரத்துக்கு ஒரு பழங்குடியின மொழி அழிவதாக ஐ.நா. வெளியிட்ட ஓர் ஆய்வறிக் கையில் தெரியவந்துள்ளது. பழங்குடியின மக்கள் உலகின் மிகவும் பின்தங்கிய மற்றும் அதி கம் பாதிக்கப்படக்கூடிய மக்களாக உள்ளனர். அவர்களின் உரிமை களைப் பாதுகாப்பதற்கும் அவர் களின் தனித்துவமான கலாச்சாரங் களையும் வாழ்க்கை முறையையும் பராமரிக்கச் சிறப்பு நடவடிக்கைகள் தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்து வடிவம் பெறுமா?

தமிழகத்தில் வசிக்கும் காடர், முதுவர், இருளர், ஊராளி, சோளகர், அடியன், தொதவர், கோத்தர், பணியர், காட்டு நாயக்கர், குறும்பர், இருளர் உள்ளிட்ட பழங்குடியினர் தங்கள் பூர்வீக பழங்குடியின மொழிகளைப் பேசுகின்றனர். அரசும், பல்கலைக்கழகங்களும், தன்னார்வ நிறுவனங்களும், இதில் ஒருசில பழங்குடியின மக்கள் பேசும் தனித்த மொழிகள் குறித்து சில ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. ஆனாலும், இம்மொழிகளுக்கு எழுத்து வடிவம் அளிக்கும் பணி இன்னும் முழுமையடையவில்லை. இதுவரை எழுத்து வடிவம் பெறாத பழங்குடிகளின் மொழிக்கு உடனே அரசு போதுமான நிதி ஒதுக்கி அவற்றுக்கு எழுத்து வடிவம் அளிக்க வேண்டும் என்பதே பழங்குடியினருக்காகப் போராடும் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in