Published : 08 Aug 2019 08:41 PM
Last Updated : 08 Aug 2019 08:41 PM

செட்டாப் பாக்ஸ் கம்பெனி, 2 லட்சம் கேபிள் இணைப்பு: உடுமலை ராதாகிருஷ்ணன்மீது நடவடிக்கை வேண்டும்: ஸ்டாலின்

அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தில் வழங்கப்பட்டுள்ள செட்டாப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பாக லஞ்ச ஊழல் தடுப்புத்துறை மூலம் உரிய விரிவான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

அ.தி.மு.க அமைச்சரவையில், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனை விடுவித்து, தமிழ்நாடு அரசு கம்பி வடத் தொலைக்காட்சி நிறுவனத்தில் இதுவரை தொடர்ந்து நடந்து வந்த ஊழல்களை மூடி மறைக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சியில் இறங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

நேற்றைய தினம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் மணிகண்டன், “கேபிள் கட்டணம் குறைப்பது தொடர்பாக, துறை அமைச்சரான தன்னிடம் முதல்வர் ஆலோசிக்கவில்லை” என்றும், “தமிழ்நாடு அரசு கம்பி வடத் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், 2 லட்சம் கேபிள் இணைப்புகள் கொண்ட தனியார் கேபிள் நிறுவனத்தை நடத்தி வருகிறார்” என்றும், பரபரப்புக் குற்றச்சாட்டைக் கூறியிருப்பது, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில், “ஆட்சியில் உள்ளவர்கள் அதிகாரத்தை எப்படி துஷ்பிரயோகம் செய்து, லஞ்ச - ஊழல் செய்கிறார்கள் ” என்பதற்கு, அந்தக் கூட்டத்திலிருந்தே மேலும் ஒரு ஆதாரமாக வெளிவந்திருக்கிறது.

அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தின் அமைச்சராக இருக்கும் ஒருவரே அதன் தலைவராக இருப்பவர் மீது இப்படியொரு பகிரங்கக் குற்றச்சாட்டை வைத்த பிறகும் - அந்தக் குற்றச்சாட்டிற்கு உள்ளானவரை பாதுகாப்பதில் முதல்வர் மிகுந்த ஆர்வமாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இது ஒருபுறமிருக்க, “தரநிலை வரையறை மேலமர்வு பெட்டிகள் (SD Set Top Box) தயாரிக்கும் “வில்லட்” நிறுவனத்தையும் உடுமலை ராதாகிருஷ்ணன் நடத்தி வருகிறார்” என்று இன்னொரு ஆதாரப் பூர்வமான குற்றச்சாட்டையும் துறை அமைச்சராக இருந்தவரே கூறியிருக்கிறார். அரசு கம்பி வடத் தொலைக்காட்சி நிறுவனம் அமைச்சராக இருந்த மணிகண்டன் கட்டுப்பாட்டில் இருப்பதால், இந்தப் புகாரில் வலுவான ஆதாரம் இருக்கிறது என்பது தெளிவாகிறது.

குறிப்பாக அரசு தொலைக்காட்சி நிறுவனத்தின் கீழ் உள்ள கேபிள் இணைப்புகளுக்கு, 60 லட்சம் செட்டாப் பாக்ஸ்களும், (SD Set Top Box) 10 லட்சம் எச்.டி. செட்டாப்பாக்ஸ்களும் (HD Set Top Box) வழங்குவதற்கான உலகளாவிய கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில் - அமைச்சரின் குற்றச்சாட்டு அதி முக்கியத்துவம் பெறுவதோடு, விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியது என்பதும் உறுதியாகிறது.

இந்நிலையில், 2 லட்சம் தனியார் கேபிள் இணைப்புகளை வைத்துக் கொண்டுள்ள ஒருவரை, அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக சில தினங்களுக்கு முன்பு அவசர அவசரமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்தது ஏன்? 70 லட்சம் செட்டாப் பாக்ஸுகள் வாங்கும் கொள்முதல் விவகாரத்தில் துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் கொடுக்கல் - வாங்கல் சம்பந்தமாக நடைபெற்ற பனிப்போர் என்ன?

இந்த செட்டாப் பாக்ஸுகளை வழங்கக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத்திற்கும் அமைச்சரின் குற்றச்சாட்டிற்கும், பிறகு அமைச்சரின் பதவி நீக்கத்திற்கும் என்ன தொடர்பு? இந்த கேள்விகளுக்கு எல்லாம் முதலமைச்சர் பழனிச்சாமி உடனடியாக வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

செட்டாப் பாக்ஸ் தயாரிப்பிலும் ஈடுபட்டு, தனியார் கேபிள் நிறுவனமும் நடத்தி வரும் உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணனை அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கி, ஏற்கனவே அந்த நிறுவனத்தில் வழங்கப்பட்டுள்ள செட்டாப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பாக லஞ்ச ஊழல் தடுப்புத்துறை மூலம் உரிய விரிவான விசாரணைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x