Published : 11 Jul 2015 11:16 AM
Last Updated : 11 Jul 2015 11:16 AM

3 முக்கிய சாலைகளை ரூ.200 கோடியில் 4 வழிப்பாதையாக மாற்ற திட்டம்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

தமிழகத்தின் 3 முக்கிய சாலைகளை ரூ.200 கோடி செலவில் 4 வழிப் பாதையாக மாற்றும் பணியை விரைவில் தொடங்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் வாகனங்கள் அதிகரித்துவரும் நிலையில், சாலை விபத்துகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குறிப்பாக நெடுஞ்சாலைகளிலும் மாவட்ட இணைப்பு சாலைகளிலும் விபத்துகள் அதிகமாக நடக்கின்றன.

எனவே, சாலைகளை மேம் படுத்துவது, விரிவாக்கம் மற்றும் வடிவமைப்பை மாற்றுவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய நெடுஞ்சாலைத் துறை சார்பில் பொறியாளர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் பல்வேறு மாவட்ட சாலைகளில் ஆய்வு மேற் கொண்டு தமிழக அரசிடம் ஏற்கெனவே அறிக்கை வழங்கி யுள்ளனர். இதன்படி, காஞ்சிபுரம் - வந்தவாசி (22 கி.மீ), சட்ராஸ் - செங்கல்பட்டு (26 கி.மீ), ஆற்காடு – விழுப்புரம் (82 கி.மீ), மல்லியகரை – ராசிபுரம் - திருச்செங்கோடு - ஈரோடு (50.50 கி.மீ), ராஜபாளையம் - சங்கரன்கோவில் - திருநெல்வேலி (75 கி.மீ) உள்ளிட்ட 10 சாலைகள் ரூ.1,819 கோடியில் விரிவாக்கம் மற்றும் தரம் உயர்த்தப்பட உள்ளன. இதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு, இம்மாத இறுதியில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

இதேபோல, வாகனங்கள் அதிகமாக செல்லும் சாலைகளை விரிவுபடுத்த நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, 145 கி.மீ. தொலைவுள்ள 3 முக்கிய சாலைகள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. இருவழிப் பாதையாக இருக்கும் இந்த சாலைகளை 4 வழிப்பாதைகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

நெடுஞ்சாலைகள் தொடர்பாக பொறியியல் வல்லுநர்கள் குழு அளித்த அறிக்கையின்படி ஒட்டன்சத்திரம் - திருப்பூர், திருநெல்வேலி - தென்காசி, கோபி - ஈரோடு என மொத்தம் 145 கி.மீ. தொலைவுள்ள 3 முக்கிய சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தற் போதுள்ள இருவழிப் பாதைகள் 4 வழிப்பாதையாக மாற்றப்பட உள்ளன. இதற்கு ரூ.200 கோடி செலவாகும். இதற்கான டெண்டர் விடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அடுத்த 4 மாதங்களில் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x