

வால்பாறையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், ஆழியாறு குரங்கருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி - வால்பாறை சாலையில், வில்லோனி வனப்பகுதியில் ஆழியாறு குரங்கருவி உள்ளது. வால்பாறை மலைப்பகுதியில் உள்ள தலநார், சக்தி எஸ்டேட் பகுதிகளில் பெய்யும் மழை நீர், சோத்துப்பாறை ஆற்றில் கலந்து வில்லோனி வனப்பகுதியில் குரங்கு அருவியாகக் கொட்டுகிறது.
சுமார் 80 அடி உயரத்தில் இருந்து மிதமான வேகத்தில் கொட்டும் அருவியில் குளிக்கத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
கடந்த சில நாட்களாக வால்பாறை மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி சோலையாறு - 165 மி.மீ., மேல் நீராறு- 226 மி.மீ, கீழ் நீராறு- 162 மி.மீ, வால்பாறை- 138 மி.மீ., காடம்பாறை- 46 மி.மீ., அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது.
வால்பாறையில் உள்ள சக்தி, தலநார் எஸ்டேட் பகுதிகளில் பெய்த கனமழையால் சோத்துப்பாறை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம், குரங்கு அருவியில் பாதுகாப்புக் கம்பியைத் தாண்டி ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. வெள்ளத்தில் கற்கள், மரக்கிளைகள் அடித்து வரப்படுவதால் பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.