Published : 08 Aug 2019 05:35 PM
Last Updated : 08 Aug 2019 05:35 PM

காங்கிரஸ் தயவால் நான் மாநிலங்களவை செல்லவில்லை; ஈழத்தமிழினத்தை அழித்த கட்சியை மன்னிக்க முடியாது: வைகோ கடும் விமர்சனம்

வைகோ: கோப்புப்படம்

சென்னை

காஷ்மீர் விவகாரத்தில் மக்களவையில் வாக்களிக்காத காங்கிரஸ் கட்சியினர் 12 பேர் எவ்வளவு பணம் வாங்கினார்கள் என, மதிமுக எம்.பி. வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினர் வைகோ பேசும்போது, காங்கிரஸையும் குற்றம் சாட்டி விமர்சித்தார். அதற்கு பதிலளிக்கும் விதத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (வியாழக்கிழமை) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் வைகோவை கடுமையாக விமர்சித்திருந்தார். அதில், வைகோ அரசியல் சந்தர்ப்பவாதி என கூறியிருந்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "காங்கிரஸ் கட்சியின் ஆதரவால் தான் நான் மாநிலங்களவைக்குச் சென்றதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார். இது தவறு. அவர் ஆத்திரத்தில், கோபத்தில், என்மீது கொண்டுள்ள வன்மத்தில் இப்படி சொல்லியிருக்கிறார். திமுகவுக்கு 101 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். ஒரு ராஜ்ய சபா உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்கள் ஆதரவு போதும்.

திமுக என்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பியது. திமுக எம்எல்ஏக்கள் ஓட்டுப் போட்டு என்னை மாநிலங்களவைக்கு அனுப்பியுள்ளனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் அல்ல. காங்கிரஸ் தயவில் நான் சென்றதில்லை. மூன்று முறை கருணாநிதி என்னை திமுக எம்.பி.யாகத்தான் அனுப்பினார்.

காங்கிரஸிடம் ஓட்டு வாங்கி நான் என்றைக்கும் மாநிலங்களவைக்குச் சென்றதில்லை. மக்களவைக்கு இரண்டு முறையும் பாஜகவுடன் தான் கூட்டணி வைத்துப் போட்டியிட்டேன். காங்கிரஸுடன் கூட்டணி இல்லை. காங்கிரஸ் தயவால் போட்டியிட்டதில்லை, அப்படி செய்யவும் மாட்டேன்.

ஒரு இனத்தையே அழித்த பாவிகள் காங்கிரஸ்காரர்கள். நான் காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்தவன். நான் சிறுவனாக இருந்தபோது, காமராஜர் எங்கள் வீட்டில்தான் வந்து தங்கினார். அவர் தங்குவதற்காகத்தான் வீட்டில் குளியல் அறை கட்டினோம். ஆனால், மாணவனாக அண்ணாவின் இயக்கத்தில் திமுகவில் சேர்ந்தேன். கோபப்பட்டால் வேறு ஏதாவது என்னை திட்டி தீர்த்துக்கொள்ளுங்கள். காங்கிரஸ் என்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பியதாக இனிமேல் சொல்லாதீர்கள்" என வைகோ தெரிவித்தார்

இதையடுத்து, அமித் ஷா சொல்லித்தான் காங்கிரஸை விமர்சித்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த வைகோ, "அற்ப புத்தி உள்ளவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. மோடியை நான் சந்தித்தபோது, காஷ்மீர் விவகாரத்தில் பாஜகவை எதிர்த்து வாக்களிப்பேன் என்று சொன்னேன். அணை பாதுகாப்பு மசோதா கொண்டு வந்தால், இந்தியா துண்டு துண்டாக உடையும் எனக் கூறினேன். மேகேதாட்டு அணை கொண்டு வந்தால் தென்னாடு அழியும் என்றேன். ஹைட்ரோகார்பன் திட்டம் தமிழகத்தை எத்தியோப்பியாவாக மாறிவிடும் எனத் தெரிவித்தேன். இந்தியாவில் இருக்க முடியாமல் தமிழ்நாடு தனியாகச் செல்ல வேண்டிய அவசியம் நேரிடும் என்று நேருக்கு நேராகக் கூறினேன்.

காஷ்மீர் விவகாரத்தில் மக்களவையில் காங்கிரஸ் கட்சியினர் 12 பேர் வாக்களிக்காமல் ஓடிப்போய் விட்டார்களே. எவ்வளவு பணம் வாங்கினார்கள்? 12 பேரும் பணம் வாங்கிவிட்டனரா?

தமிழகத்தில் ஆயத்தை ஆடைத் தொழில் அழிவதற்கு சீனாவும், வங்கதேசமும் காரணம் என சொன்னபோது, சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசுவதாக மோடி கூறினார். இந்தக் கோரிக்கைகளை மன்மோகன் சிங்கிடம் சொன்னது போலத்தான் நான் உங்களிடமும் சொன்னேன் எனக் கூறினேன். நான் எங்கேயும் கொள்கைகளை விட்டுக் கொடுத்ததில்லை என்பதை உலகமே அறியும்.

அரசியலில் பெரியாரும், ராஜாஜியும் கடைசிவரை நண்பர்களாகத்தான் இருந்தனர். பெரியாரையும், ராஜாஜியையும் யாரும் குறை சொல்லவில்லை. மன்மோகன் சிங்கை சந்தித்தபோதும்கூட பிரதமராக உங்களைக் கண்டிக்கிறேன், நண்பராகப் பார்க்கிறேன் எனச் சொன்னேன். மன்மோகன் சிங்கைப் பார்த்த போது அவர் என்னிடம், "நீங்கள் என் இளைய சகோதரர், எங்கள் வீட்டுக்கு குடும்பத்துடன் சாப்பிட வாருங்கள்" எனக் கூறினார்.

யாரையோ திருப்திப்படுத்தும் அற்ப புத்தி எனக்கு இல்லை. அதற்கெல்லாம் அப்பாற்பட்டவன். பிரதமரிடமே நேரடியாகத் தவறுகளைச் சுட்டிக்காட்டும் தைரியமுள்ளவன் வைகோ மட்டுமே. உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இது தெரியும். ஈழத் தமிழினத்தைப் படுகொலை செய்த பாவிகள் காங்கிரஸ்காரர்கள். அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது".

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x