Published : 08 Aug 2019 03:44 PM
Last Updated : 08 Aug 2019 03:44 PM

கருணாநிதி குறித்த அனைத்து தகவல்கள்: இணையதளம் தொடங்கியது திமுக

சென்னை

கருணாநிதியின் சாதனைகள், படைப்புகள், உரைகள், மேடைப் பேச்சுகள், புகைப்படங்கள், காணொளிகள் அடங்கிய இணையதளத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திமுக சார்பில், பேரணி, சிலை திறப்பு, பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (வியாழக்கிழமை), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், கருணாநிதி குறித்த முழுத்தகவல் அடங்கிய புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார். திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த இணையதளம்.

கருணாநிதியின் சாதனைகள், படைப்புகள், உரைகள், மேடைப் பேச்சுகள், புகைப்படங்கள், காணொளிகள் மற்றும், நேற்று சிலை திறப்பு விழா மேடையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியால் வெளியிடப்பட்ட 'முரசொலி' மலரில் அடங்கியுள்ள அனைத்து கருத்துகளையும் உள்ளடங்கியதாக www.kalaignar.dmk.in என்ற பெயரில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.

திமுக வரலாறு, பல்வேறு காலக்கட்டங்களில் கருணாநிதி பேசிய பேச்சுகள், அவரது படைப்புகள், புகைப்படங்கள், வரலாற்று நிகழ்வுகள் என திமுகவைப்பற்றி கருணாநிதியைப்பற்றி அறிய விரும்பும் அனைவருக்கும் இந்த இணையதளம் பயன்படும்.

கருணாநிதி குறித்த இணையதளம்

இந்நிகழ்வின்போது திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் க.பொன்முடி, எம்எல்ஏ, திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் இரா.ஆவுடையப்பன், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன், எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x