`சுருள்பாசி’ வளர்ப்பில் சாதிக்கும் விவசாயி!

`சுருள்பாசி’ வளர்ப்பில் சாதிக்கும் விவசாயி!
Updated on
2 min read

கி.பார்த்திபன்

போதிய மழையின்மை, வறட்சி, மூலப் பொருட்கள் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாளுக்கு நாள் விவசாயம் நலிவடைந்து வருகிறது. இதனால் பலர் விவசாயத் தொழிலைக் கைவிட்டு, மாற்றுத் தொழில் தேடிச் செல்லும் பரிதாபத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்ற இக்கட்டான சூழலையும் சில விவசாயிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி சாதிப்பதுடன், பிறருக்கு முன்னுதாரணமாகவும் திகழ்கின்றனர்.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வையப்பமலையைச் சேர்ந்த விவசாயி எல்.டி.முருகானந்தம்(60), சுருள்பாசி (ஸ்பைருலினா) என்ற கடல்வாழ் தாவரத்தை வளர்த்து, அதன் மூலம் சோப்பு உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரித்து, லாபகரமாக தொழில் நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். அவரை சந்தித்தோம்.

“சொந்த ஊரான வையப்பமலையில் விவசாயம் நலிந்ததால், எனது 5 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தேன். தொடர்ந்து, விவசாயத்துக்கு இணையாக என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, சுருள்பாசி வளர்ப்பு குறித்து அறிந்தேன். இது தொடர்பாக 2010-ல் சென்னையில் பயிற்சி மேற்கொண்டேன். அதில், சுருள்பாசி குறித்தும், அதன் பயன்பாடுகள், தயாரிப்பு முறைகள் குறித்தும் அறிந்துகொண்டேன்.

தொடர்ந்து, வையப்பமலையில் வாடகைக்கு இடம் பிடித்து, சுருள்பாசி உற்பத்திக்கான தொட்டிகள் அமைத்தேன். ஆரம்பத்தில் 20 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட தொட்டியை உருவாக்கி, அதில் சுருள்பாசி வளர்த்தேன். நாள்தோறும் குறைந்தபட்சம் 5 கிலோ கிடைத்தால்தான் லாபம் கிடைக்கும் என்று தெரிந்தது.

இதையடுத்து, 100 அடி நீளம், 22 அடி அகலம் கொண்ட 3 தொட்டிகள் கட்டி, அதில் சுருள்பாசி வளர்த்து வருகிறேன். இது கடல்வாழ் தாவரமாகும். உப்பு நீரில் வளரக்கூடியது. தண்ணீரை அரை மணி நேரத்துக்கு ஒருமுறை கிளறிவிட வேண்டும். மின் மோட்டார் மூலம் துடுப்பு அமைத்து, தண்ணீரைக் கிளற ஏற்பாடு செய்துள்ளேன். தினமும் 6 முதல் 8 கிலோ வரை சுருள்பாசி உற்பத்தி செய்யப்
படுகிறது.

இவ்வாறு உற்பத்தியாகும் சுருள்பாசியை தொட்டியில் இருந்து எடுத்து, உலர வைப்போம். பின்னர் அவை பொடியாகத் தயாரித்தும், மாத்திரை வடிவில் மாற்றியும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஒரு கிலோ சுருள்பாசி ரூ.600 வரை மார்க்கெட்டில் விற்பனை
யாகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நான் மட்டும்தான் சுருள்பாசி உற்பத்தியில் ஈடுபடுகிறேன். சராசரியாக தினமும் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை வருவாய் கிடைக்கிறது” என்றார்.

“இதெல்லாம் சரி, சுருள்பாசியால் என்ன பயன்?” என்று கேட்டோம். “பூமியில் முதலில் தோன்றிய தாவர வகையாக சுருள்பாசியைக் குறிப்பிடுகின்றனர். ஏராளமான பாசி வகைகள் இருந்தாலும், குறிப்பிட்ட சில ரகங்கள் மட்டுமே சாப்பிட உகந்தது. அந்த வகையில், சுருள்பாசி நாம் சாப்பிட உகந்ததாக உள்ளது. உலக சுகாதார நிறுவனமும் இதை அங்கீகரித்துள்ளது. சிலர் இதை ஏற்றுமதியும் செய்கின்றனர்.

காய்கறி, பழங்கள், இறைச்சி உள்ளிட்டவற்றைக் காட்டிலும் சுருள்பாசியில் புரதச் சத்துகள் அதிகம். உதாரணமாக 100 கிராம் சுருள்பாசியில், 70 சதவீதம் புரதச்சத்து உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் உண்ணலாம். இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன.

சூரிய ஒளி, காற்றில் உள்ள சத்துகளைக் கிரகித்து வளரக்கூடியது சுருள்பாசி. தொட்டி திறந்த நிலையில் இருப்பதால், வெயில், காற்றில் தண்ணீர் ஆவியாகிவிடும். எனவே, வாரத்துக்கு ஒருமுறை தண்ணீரை நிரப்ப வேண்டும். இங்குள்ள 3 தொட்டிகளும் தலா 50 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்டவை. தற்போது தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால், விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறேன். ஒருமுறை இதில் ஊற்றப்படும் தண்ணீரில் விடப்படும் சுருள்பாசியை, குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை அறுவடை செய்யலாம்.
சுருள்பாசி உணவாக மட்டுமின்றி, சோப்பு தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. பொதுமக்களிடம் சுருள்பாசி குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. விவசாயத்துக்கு மாற்றாகத் திகழும் சுருள்பாசி வளர்ப்புக்கு, மத்திய, மாநில அரசுகள் வேளாண் துறை மூலம் வங்கிக் கடனுதவி, பயிற்சி வழங்கினால் உதவியாக இருக்கும்” என்றார்.

நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “சுருள்பாசி புரதச்சத்து மிகுந்த உணவு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடம் குறைவாக உள்ளது. சுருள்பாசியை தயக்கமின்றி அனைவரும் சாப்பிடலாம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in