Last Updated : 07 Aug, 2019 06:06 PM

 

Published : 07 Aug 2019 06:06 PM
Last Updated : 07 Aug 2019 06:06 PM

கீழடி அகழாய்வில் வெளிநாட்டு அணிகலன்கள்; அகலமான செங்கல் சுவர் கட்டிடம் கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் வெளிநாட்டில் அணியும் அகேட் (agate) வகை அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு கண்டறியப்பட்ட உறைகிணற்றின் உயரமும் தோண்டத்தோண்ட அதிகரித்து கொண்டே செல்கிறது.

கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இதை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வோடு நிறுத்தி கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல்துறை 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய் ஜூன் 13-ம் தேதி தொடங்கியது.

இதுவரை முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு ஆகியோரது நிலங்களில் 23 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

கடந்த மாதம் மண்பாண்ட ஓடுகள், இரட்டை சுவர், நீளமான சுவர், அகலமான சுவர், கல்லால் செய்யப்பட்ட மணிகள், உறைகிணறுகள், எலும்பாலான எழுத்தாணி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) போதகுரு என்பவரின் நிலத்தில் அகலமான செங்கல்களால் கட்டப்பட்ட கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செங்கல்களைவிட இது அகலமானது.

முருகேசன் நிலத்தில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணற்றின் உயரம் நீண்டு கொண்டே செல்கிறது. இதுவரை 7 உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உறையும் ஒன்றரை அடி உயரம் உள்ளன. இதனால் தண்ணீர் பற்றாக்குறையால் அதிக ஆழத்தில் உறைகிணறு அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் இங்கு கிடைத்துள்ள அணிகலன்கள், வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள மலைகளில் வெட்டி எடுக்கப்படும் அகேட் (agate) வகை கல்லில் செய்யப்பட்டவை.

இதனால் பழந்தமிழர்களுக்கும், வெளிநாட்டினருக்கும் தொடர்பு இருந்துள்ளது உறுதியாகியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x