

தமிகத்தில் தனியார் கல்லூரி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தனியார் கல்லூரி ஒழுங்குமுறை சட்டப்படி 12 வாரங்களில் தீர்ப்பாயங்கள் அமைக்க வேண்டும் என உயர்கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை தமிழ்வேள் உமா மகேஷ்வரானார் கலை கல்லூரி பேராசிரியர்கள் டாக்டர் எஸ்.செந்தில்குமார், டாக்டர் துரை பன்னீர்செல்வம். இவர்கள் கல்லூரிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கல்லூரி நிர்வாகம் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கியது. இது தொடர்பாக விசாரணை நடத்தி இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கல்லூரி கல்வி இணை இயக்குனரிடம் ஒப்புதல் பெறாமல் தங்களை பணி நீக்கம் செய்திருப்பதாகவும், இதனால் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து பணப்பலன்களை வழங்கக்கோரி பேராசிரியர்கள் இருவரும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் பணி நீக்கத்தை ரத்து செய்து, இருவரிடம் விளக்கம் பெற்று நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டு கல்லூரி கல்வி இணை இயக்குனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய கல்லூரி கல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டார். மறு பரிசீலனைக்கு பிறகும் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை கல்லூரி கல்வி இணை இயக்குனர் ஏற்கவில்லை.
இதையடுத்து, தனியார் கல்லூரி ஒழுங்குமுறை சட்டம் 1976-ல் தனியார் கல்லூரிகளில் கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இரண்டாவது மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்து தீர்வு பெற தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி தீர்ப்பாயம் அமைக்க உத்தரவிட வேண்டும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், "தனியார் கல்லூரி ஒழுங்குமுறை சட்டத்தில் பிரிவு 21-ன் கீழ் தனியார் கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு இரண்டாவது மேல்முறையீட்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்.
இந்த சட்டம் 1976-ல் நிறைவேற்றிய போதும், 43 ஆண்டுகளாக தீர்ப்பாயம் அமைக்கப்படவில்லை. தற்போது தீர்ப்பாயம் அமைக்கப்படும் என அரசு தப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தனியார் கல்லூரி ஒழுங்குமுறை சட்டத்தின் பிரிவு 38 அடிப்படையில், அதே சட்டம் பிரிவு 21-ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க தீர்ப்பாயங்களை அமைக்க வேண்டும்.
இது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை செயலர் 12 வாரங்களுக்குள் அறிவிப்பாணை வெளியிட வேண்டும்.
அறிவிப்பாணை வெளியானதும் கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக தங்களது எல்லைக்கு உட்பட்ட தீர்பாயங்களை 4 வாரத்தில் அணுக உரிமை வழங்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.