Published : 07 Aug 2019 05:17 PM
Last Updated : 07 Aug 2019 05:17 PM

வறட்சியால் ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தையில் இருந்து கேரளா செல்லும் அடிமாடுகள்: சோகத்தில் கால்நடை விவசாயிகள்

வறட்சியால் மாடுகளை வளர்க்கமுடியாமல் விவசாயிகள் விற்றுவரும் நிலையில் வாங்கப்படும் மாடுகள் பெரும்பாலும் கேரளாவிற்கு அடிமாட்டிற்காக வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பிரபலமான மாட்டுச்சந்தை உள்ளது. திங்கள் கிழமை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் மாட்டுச்சந்தை காலை 10 மணி வரை நடைபெறும்.

திண்டுக்கல், தேனி, கரூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட சுற்றுப்பகுதி மாவட்டங்களை சேர்ந்த மாடுகள் இங்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. உள்ளூர் மாட்டுவியாபாரிகள், கேரளாவில் இருந்து மாட்டுவியாபாரிகள் என வாரந்தோறும் ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தைக்கு வந்து மாடுகளை வாங்கிச்செல்கின்றனர்.

இந்நிலையில் அண்மைக்காலமாக விவசாயிகள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக மாடுகளை வாங்கிச்செல்வது மிகவும் குறைந்துகாணப்படுகிறது.

ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தையில் கன்றுகுட்டிகள் முதல் நாட்டுமாடு, எருமைமாடு, ஜல்லிக்கட்டு மாடுகள், ஜெர்சி மாடுகள் என பலவகையான மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

இளங்கன்றுகள் ஆயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. நாட்டுமாடுகள் 35 ஆயிரம் முதல் விற்பனையாகிறது. முதிர்ந்த மாடுகள் பத்தாயிரம் முதல் விற்பனையாகிறது. இவற்றை எடையை பொறுத்து வாங்குகின்றனர்.

பசுமாடுகள் 20 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை விலை போகின்றன.

இதில் கிடா கன்றுகள், முதிர்ந்த மாடுகள், எருமைமாடுகள் ஆகியவற்றை குறிப்பாக கேரள வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர். இவை அடிமாடாக மாமிசத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

விவசாயிகள் பெரும்பாலும் உழவு மாடுகளை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. பசுமாடுகளை தான் வாங்குகின்றனர்.

ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தைக்கு தனது பசுமாட்டை விற்க வந்த தொப்பம்பட்டியை சேர்ந்த விவசாயி லட்சுமணசாமி கூறுகையில், "வறட்சி காரணமாக மாடுகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே தண்ணீர் மற்றும் தீவன பற்றாக்குறையால் மாடுகளை வளர்ப்பதில் சிரமம் இருக்கிறது.

என்னிடம் இருந்த நான்கு மாடுகளில் இரண்டு மாடுகளை விற்க வந்துள்ளேன். 40 ஆயிரம் ரூபாய்க்கு நான்கு மாதங்களுக்கு முன்பு பசுமாடு வாங்கினேன். தற்போது தீவனம் குறைவு காரணமாக குறைவாகவே பால் கறக்கிறது.

விவசாயி லட்சுமணன்.

இதனால் கட்டுபடியாகவில்லை. பால் வருவாயை விட செலவு அதிகமாகிறது. எனவே விற்பதற்கு கொண்டுவந்துள்ளேன். தற்போது 20 ஆயிரம் ரூபாய் கேட்கின்றனர். நஷ்டத்திற்கு தான் விற்கவேண்டிய நிலை உள்ளது, என்றார். வாரம் ஒரு முறை கூடும் ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தையில் ஒரு நாள் வியாபாரமாக மொத்தமாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மாடுகள் விற்பனையாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x