

அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் கல்வி நிறுவனங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனம் 37 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆக.5-ம் தேதி கணக்கின்படி இதுவரை 49 லட்சத்து 50 ஆயிரம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர். ஆக.5-ம் தேதி மட்டும் 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் தரிசித்துள்ளனர்.
கோயிலுக்கு அதிக பக்தர்கள் வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொது தரிசனத்தில் மக்கள் தரிசிக்க நீண்ட தாமதம் ஏற்படுகிறது. ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் அத்திவரதர் மீண்டும் குளத்துக்குள் வைக்கப்படுவார் என்பதால், அவரைத் தரிசிக்கக் கட்டுக்கடங்காத பக்தர் கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஆகஸ்ட் 13,14,16 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்திவரதர் கோயிலுக்கு வரும் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது விடுமுறை ஏற்கெனவே அமலில் உள்ளது. அதையும் சேர்த்து 4 நாட்கள் விடுமுறை.
முன்னதாக மாவட்ட நிர்வாகம் சார்பில், ''ஆக.17-ம் தேதி நண்பகல் 12 மணியுடன் கிழக்கு கோபுரவாசல் மூடப்படும். கோயிலுக்கு உள்ளே வந்தவர்கள் மட்டும் அத்திவரதரை தரிசனம் செய்யலாம்.
மாலை 5 மணியுடன் தரிசனம் முடிக்கப்பட்டு, அத்திவரதரை மீண்டும் அவரது இடத்தில் வைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கும்'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.