

சென்னை
கருணாநிதி தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல்வாதி என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று (புதன்கிழமை) தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, தமிழகம், கர்நாடகம் இடையே உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே மேகேதாட்டுவில் அணை என, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசினார்.
"தமிழகத்தை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என பொய்யான பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் சொல்லிவந்தன. எந்தவிதத்திலும் மத்திய அரசு தமிழகத்திடம் பாரபட்சமாக நடந்துகொள்ளாது என நான் கூறி வந்தேன். அது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதற்கு மத்திய அரசுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேகேதாட்டுவில் அணை கட்டக்கூடாது. அதற்கு முயற்சிகள் மேற்கொள்ளக்கூடாது என தமிழக பாஜக சார்பாக மத்திய அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது", என தமிழிசை தெரிவித்தார்.
இதையடுத்து மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குறித்துப் பேசிய அவர், "கருணாநிதி சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல்வாதி. அவருக்கு என் வணக்கம்" என தமிழிசை தெரிவித்தார்.