

அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கலைஞருக்கு எனது இதயபூர்வமான அஞ்சலியைத் தெரிவிக்கிறேன் என்று அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைந்து ஓராண்டு ஆன நிலையில், அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள மைத்ரேயன், "ஒன்றரை ஆண்டு இடைவெளியில் தமிழக அரசியலின் இருபெரும் அசைக்க முடியாத சக்திகள் நம்மை விட்டு எட்டாத தூரம் சென்று விட்டனர். 2016 டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவின் மறைவு நம் அனைவருக்கும் மீளாத துயரத்தைத் தந்தது. அந்தத் துயரத்தில் இருந்து மீள்வதற்குள் 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி கருணாநிதி காலமானார்.
அரசியல் களத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் இருவரின் மறைவு தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது.
அறுபதுகளில் நான் பள்ளி மாணவனாக இருந்தபோது கேட்ட ஒரு அரசியல் பொதுக்கூட்டம் எனது நினைவுக்கு வருகிறது. 1967-ல் திமுக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த பிறகு 1968-ல் சென்னை மாநகராட்சித் தேர்தல் நடந்தது. மயிலாப்பூர் சாய்பாபா கோயிலை ஒட்டிய வார்டுக்கு திமுக சார்பில் மயிலை சாரங்கனும் காங்கிரஸ் சார்பில் டாக்டர் ரமாதேவியும் போட்டியிட்டனர்.
அப்போது அண்ணா புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். திமுக சார்பில் ’அமெரிக்காவில் இருக்கும் அண்ணன் மனம் மகிழ அளிப்பீர் உதயசூரியனுக்கு வாக்கு’ என்று சென்னை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. காங்கிரஸ் தலைவர் சி. சுப்பிரமணியம் பொதுக்கூட்டத்தில் பேசும் போது அதைக் குறை கூறி பேசினார்.
அடுத்த நாள் சாய்பாபா கோயில் பாலம் அருகே ஸ்தூபி இடத்தில் கலைஞர் கலந்து கொள்ளும் திமுகபொதுக்கூட்டம் நடந்தது. அன்றுதான் நான் முதல் முறையாக கலைஞரை நேரில் பார்த்தேன். அப்போது எனக்கு 13 வயது. 8-ம் வகுப்பு மாணவன். கலைஞர் பேசும் போது "அமெரிக்காவில் இருக்கும் அண்ணன் மனம் மகிழ அளிப்பீர் உதயசூரியனுக்கு வாக்கு என்று கேட்டோம். அது தவறா? இல்லை என்றால் எப்படிக் கேட்பது? சுப்பிரமணியம் மனம் மகிழ அளிப்பீர் உதயசூரியனுக்கு வாக்கு என்றா கேட்பது?" என்று பதிலடி கொடுத்துப் பேசியது இன்றும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இன்று கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவருக்கு எனது இதயபூர்வமான அஞ்சலி" என்று தெரிவித்துள்ளார் மைத்ரேயன்.