

காஞ்சிபுரம்
காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி புத்திசாலித்தனமான முடிவு எடுத்திருப்பதாக, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அதிகாரங்கள் மற்றும் உரிமைகளை ரத்து செய்யவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கவும் வழிகோரும் சட்டத்திருத்த மசோதா, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியது.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் இன்று (புதன்கிழமை) அத்திவரதரை தரிசித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "காஷ்மீர் பிரச்சினை இந்தியா மட்டுமல்லாது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. மாற்றுக்கட்சியினர் வெவ்வேறு கருத்துகளைச் சொன்னாலும், இது சிறந்த நிர்வாக முடிவு.
இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து காஷ்மீர் விவகாரம் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய அளவு, காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகப் பிரித்துள்ளனர். இந்த முடிவு வரவேற்கத்தக்கது. பிரதமர் மோடி புத்திசாலித்தனமாக, தைரியமான முடிவை எடுத்துள்ளார். இனி மிகப்பெரிய அச்சுறுத்தல் இல்லாமல் நாட்டைப் பாதுகாக்க முடியும். சீனா, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புக்குத் தடை விதிக்க முடியும். பொருளாதாரம் வளர்ச்சி அடையும்", என பிரேமலதா தெரிவித்துள்ளார்.