

முதுகெலும்பு இருப்பதால்தான் அதிமுக நிமிர்ந்து நன்னடை போடுவதாக திமுகவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
சென்னை க்ரீன்வேஸ் சாலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
''காவிரியின் குறுக்கே அணை கட்டப்பட்டது முழுக்க திமுகவின் ஆட்சியில்தான். முதுகெலும்பு இல்லாத விஷயங்களைச் செய்தது திமுக. உள்ளே தூக்கி சிறையில் வைத்துவிடுவார்கள் என்பதற்காக, கோழைத்தனமாக, பயந்துபோனவர்கள் திமுகவினர்.
அதனால்தான் தமிழ்நாட்டின் உரிமைகளைத் தாரை வார்த்தனர். நடந்த சம்பவங்களை வைத்துப் பாருங்கள், யாருக்கு முதுகெலும்பு இருக்கிறது, யாருக்கு இல்லை என்பது தெரியும். இந்த உரிமைகளை எல்லாம் மீட்டெடுக்கும் பணி, அதிமுக ஆட்சியில்தான் நடைபெற்று வருகிறது. அன்று உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டு இன்று, எங்களைப் பார்த்து முதுகெலும்பு இல்லை என்கிறார்கள்.
யாருக்கு முதுகெலும்பு இருக்கிறது என்று வரலாறு சொல்லும். முதுகெலும்பு இருப்பதால்தான் அதிமுக நிமிர்ந்த நன்னடை போடும் நிலைமை இருக்கிறது.
அதிமுக என்பது மிகப்பெரிய இயக்கம். அதில் செயல்படுபவர்கள், செயல்படாதவர்கள் என்று இருப்பார்கள். நன்கு செயல்படுவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு வழங்கப்படாது. இதை நிர்வாகிகள் நீக்கம் என்றெல்லாம் சொல்ல வேண்டியதில்லை. பெரிய கட்சியில் இதெல்லாம் பெரிய விஷயமில்லை''.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மக்களவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு காரசாரமாகப் பேசினார். அவரின் பேச்சின் இடையே அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் குறுக்கிட முயற்சி செய்தார். அப்போது டி.ஆர்.பாலு சற்று ஆவேசமாகக் கையை நீட்டி ரவீந்திரநாத்தை அமரும்படி சைகை காட்டியதோடு "உங்களுக்கு முதுகெலும்பு இல்லை; அமருங்கள். இங்கே முதுகெலும்பு உள்ள நபர்களைத்தான் சபாநாயகர் பேச அனுமதித்தார்" என்று கூறியது நினைவுகூரத்தக்கது.