

திமுக முன்னாள் தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று திமுக சார்பில் அமைதிப் பேரணி நடந்தது. ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கருணாநிதி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். அழகிரியும் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2016-ம் ஆண்டு வயோதிகம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சினை காரணமாக தீவிர அரசியலிலிருந்து விலகி வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உடல்நலப் பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். அண்ணா நினைவிடத்துக்குப் பக்கத்தில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இன்று அவர் மறைந்து ஓராண்டு ஆன நிலையில் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று சென்னை அண்ணாசாலையில் இருந்து அவரது நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். நினைவு தினத்தை ஒட்டி கருணாநிதியின் நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ஊர்வலமாகச் சென்ற ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நினைவிட வளாகத்தில் மு.க.ஸ்டாலின் மரக்கன்று ஒன்றையும் நட்டார்.
காலையில் திமுக பேரணி அஞ்சலி நிகழ்வு முடிந்த பின்னர், காலை 10 மணி அளவில் மு.க.அழகிரி தனது குடும்பத்தாருடன் வந்து அஞ்சலி செலுத்தினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கட்சி நிர்வாகிகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
இன்று கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார். நேற்று சென்னை வந்த அவரை ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பொன்னாடை அணிவித்து வெள்ளியில் செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலை ஒன்றையும் பரிசளித்தார்.
காலையில் நடக்கும் கருணாநிதியின் சிலைத் திறப்பு விழாவை அடுத்து மாலையில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மம்தா பானர்ஜி மற்றும் தமிழகத் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.