Published : 07 Aug 2019 11:00 AM
Last Updated : 07 Aug 2019 11:00 AM

மதுரை காடுகளுக்கு இடம் பெயரும் யானைகள்: வழித்தடத்தை மூடி மறைக்கும் வனத் துறை அதிகாரிகள்

காட்டுக்குள் திரியும் யானைகள் (கோப்புப் படம்)

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

கேரளா, தேனி வனப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் இடம் பெயர்ந்து மதுரை மாவட்டக் காடுகளுக்கு வந்து செல்கின்றன. ஆனால் யானைகள் வந்து செல்லும் வழித்தடத்தை வனத்துறை அதிகாரிகள் மூடி மறைக்கின்றனர்.

தமிழகத்தில் சுமார் 22,877 ச.கி.மீ. பரப்பளவில் காடுகள் உள்ளது. காடுகளையும், அதில் வாழும் வன விலங்குகளையும் பாதுகாப்பது வனத்துறையின் முக்கியப் பணி. ஆனால், தற்போது காடுகள் சுற்றுலாத் தலங்களாகவும், மக்களின் வாழ்விடங்களாகவும் மாற்றப்படுவதால் வன விலங்குகள் வாழ்விடம், வழித்தடம் இல்லாமல் திசை மாறிச் செல்கின்றன.

குறிப்பாக யானைகளின் வாழ்விடங்கள் ஆக்கிரமிப்பால் அவை குடிநீர், உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுகின்றன. அண்மையில் கொடைக்கானலில் யானைகள் மலைக் கிராமங்களில் புகுந்து விளை நிலங் களையும், மக்களின் வாழ்விடங்களையும் சேதப்படுத்தின.

கேரளாவில் இருந்து இடம்பெயரும் காட்டு யானைகள், தேனி மாவட்ட வனப் பகுதிகளைக் கடந்து மதுரை மாவட்ட வனப்பகுதி வரை ஆண்டுதோறும் வந்து செல்வதாக வன விலங்குகள் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து வன விலங்குகள் ஆர்வலர் ரவீந்திரன் கூறியதாவது:

தேனி போடி மெட்டு மலைத் தொடரில் இருந்து எழுமலை வழியாக மதுரை மாவட்டம் தொட்டப்பயநாயக்கனூர் வனப்பகுதி வரை யானைகள் வந்து செல்கின்றன. இந்த யானைகள் ஆண்டுதோறும் குடிநீர் தேடி இங்கு வருகின்றன. 8 முதல் 9 யானைகள் இப்பகுதியில் 3 முதல் 4 மாதங்கள் சுற்றித்திரிவதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். ஆனால், வனத்துறை அதிகாரிகள் மக்கள் அச்சப்படுவார்கள் என்று அந்த வழித்தடங்களை பதிவு செய்யாமல் உள்ளனர் என்றார். மலை மற்றும் மலையைச் சார்ந்த பகுதியில் கட்டப்படும் கட்டிடங்களை முறைப்படுத்த அரசு பல அமைப்புகளை ஏற்படுத்தி உள்ளன. 2 ஆயிரம் சதுர அடிக்குட்பட்ட வீடுகள், 5 ஆயிரம் சதுர அடிக்குட்பட்ட வணிக கட்டிடங்கள் ஆகியவற்றுக்கு ஆட்சியர் கீழ் செயல்படும் நகர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, உள்ளாட்சி அமைப்புகள், அவர்கள் உருவாக்கிய மாஸ்டர் பிளான் அடிப்படையில் அனுமதி பெற வேண்டும்.

அதற்கு மேல் வணிக ரீதியாகவும், வீடுகள் கட்டவும் மாநில அளவில் செயல்படும் ஹாகா மலையிட பாதுகாப்பு (hill area conservation authority) கமிட்டியிடம் அனுமதி பெற வேண்டும். மலையையொட்டிய வருவாய் கிராமங்கள் அல்லது மலைக்குள் இருக்கக்கூடிய வருவாய் கிராமங்களில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் அனைத்து கிராமங்களும் இந்த ஹாகா கமிட்டி எல்லை வரையரைக்குள் வருகின்றன.

இந்த கமிட்டியில் வனத் துறை, பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, குடிநீர் வடிகால் வாரியம், வருவாய்த் துறை உள்ளிட்ட துறை செயலாளர்கள் உட்பட 23 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர மக்கள் பிரதிநிதிகள் 2 பேர் (மலைக் கிராமங்களை உள்ளடக்கிய எம்எல்ஏ) இடம் பெற்றிருப்பார்கள்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு செயலாளர், இந்த குழுமத்தின் உறுப்பினர் செயலாளராக செயல்படுகிறார். இவர் இக்குழுவின் கூட்டத்தை நடத்தவும், முடிவுகளை அறிவிப்பதற்கும் அதிகாரம் கொண்டவர். ஆறு மாதத்துக்கு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை இக்குழுவின் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

இக்குழுவுக்கு மாவட்ட ஆட்சியர்தான், சம்பந்தப்பட்ட கட்டிடங்களின் விவரங்களை அனுப்ப வேண்டும். ஆனால், இந்த கமிட் டியே செயல்படாமல் முடங்கிப்போய் உள் ளது.

வனத்துறையிலும் அதிகாரி முதல் கடைநிலை ஊழியர்கள் வரை காலிப் பணியிடங்கள் உள்ளன. அவர்களால் முழு காட்டையும், அதில் வசிக்கும் வன விலங்குகளையும் பாதுகாக்கவும், கண் காணிக்கவும் முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x