

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தனக்கு வாக்களித்துள்ளதாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி கூறியுள்ளார்.
தேர்தல் முடிவுகள் தொடர்பாக ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு ஆளுங்கட்சியினர் முறைகேடுகளை செய்தனர். தேர்தல் ஆணையம் எதையும் கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்தது. ஆதாரங்களுடன் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆர்.கே.நகரில் நடந்தது தேர்தலே அல்ல. மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை.
இவ்வளவு முறைகேடுகள் நடந்தும் எனக்கு 4,590 வாக்குகள் கிடைத்துள்ளன. இது எனது நேர்மைக்கும், ஊழல் எதிர்ப்பு போராட்டத்துக்கும் கிடைத்த வெற்றியாகும். திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர் களும் எனக்கு வாக்களித்துள்ளனர். நோட்டாவுக்கு கிடைத்த 2,376 வாக்குகளும் எனக்கு கிடைத்த வாக்குகள்தான். எனக்கு மட்டுமல்ல, நோட்டாவுக்கும் சேர்த்துதான் நான் பிரச்சாரம் செய்தேன்.
மக்கள் பாதுகாப்புக் கழகம் என்ற அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளேன். 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்து வேன்.
இவ்வாறு டிராஃபிக் ராமசாமி கூறினார்.