Published : 07 Aug 2019 10:44 AM
Last Updated : 07 Aug 2019 10:44 AM

ஈரோடு இந்தியன் பப்ளிக் பள்ளியில் ‘கிட்ஸ் நியூஸ்’ பிரிவு தொடக்கம்: சர்வதேச விருது பெற்ற லிடியன் நாதஸ்வரம் பங்கேற்பு 

ஈரோடு

ஈரோடு இந்தியன் பப்ளிக் பள்ளியில் பயிலும் குழந்தைகளிடையே, செய்தி மற்றும் கலை, புகைப்பட திறமையை ஊக்குவிக்கும் வகையில் ‘கிட்ஸ் நியூஸ்’ மற்றும் ‘அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி’ என்ற இரு பிரிவுகளின் தொடக்கவிழா நேற்று நடந்தது.

பிரபல் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோர் இரு பிரிவுகளையும் தொடங்கி வைத்தனர்.

இந்தியன் பப்ளிக் பள்ளியின் மாணவர்கள் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து, நாள்தோறும் தொலைக்காட்சி செய்திகளைப்போல் வாசிக்கும் வகையில் ‘கிட்ஸ் நியூஸ்’ என்ற பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவுக்கான செய்திகளை வாசிப்பதற்காக அமைக்கப்பட்ட ஸ்டுடியோவை, நக்கீரன் ஆசிரியர் கோபால் தொடங்கி வைத்தார். இந்த அரங்கில் மாணவ, மாணவியரைக் கொண்டு உருவாக்கப்பட்ட செய்தித் தொகுப்பு விழாவில் திரையிடப்பட்டது. மேலும், ‘கிட்ஸ் நியூஸ்’ லோகோவினை லிடியன் நாதஸ்வரம் வெளியிட்டார்.

விழாவில் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேசியதாவது:

தமிழகத்தில் முதன்முறையாக குழந்தைகளைப் பயன்படுத்தி இப்பள்ளியில் கிட்ஸ் நியூஸ் உருவாக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. இப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது போல் ஓவியக்கூடம் வேறு பள்ளியில் நான் பார்த்தது இல்லை.

வெற்றி பெறுவது எளிது. வெற்றி பெறுவதைத் தக்க வைப்பது பெரிய போராட்டம். வெற்றி பெற்ற இடத்தைத் தக்கவைக்க வேண்டுமானால் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உலகம் நம்மை பின்நோக்கி தள்ளிவிடும். 12 வயதில் உலக சாதனை படைத்த லிடியன் நாதஸ்வரம், எதுவும் நம்மால் முடியும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார். இந்த வயதில் தனது திறமையை நிரூபித்து, ஒரு மில்லியன் டாலர் வெற்றி பெறுவது என்பது சாதாரணமானது அல்ல. பியானோவிடம் லிடியன் போனால், பியானோ அவரிடம் பேசுகிறது. மாணவர்கள் அவரை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும், என்றார்.

இந்தியன் பப்ளிக் பள்ளியில், ‘அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி’ மற்றும் ‘கிட்ஸ் நியூஸ்’ ஆகிய பிரிவுகளை உருவாக்கி, மாணவர்களுக்கு கலை சார்ந்த அனுபவத்தை மேம்படுத்த சிறப்பு பயிற்சி முறைகளையும், ஒரு ஊடகம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து பள்ளிக்குழந்தைகளுக்கு பயிற்சியும் அளித்த ஓவியர் ஏ.பி. தர் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து லிடியன் நாதஸ்வரம் பியானோ வாசிக்க, அவரது சகோதரி அமிர்தவர்ஷினி புல்லாங்குழல் இசைக்க, அவர் களின் தந்தை வர்ஷன் சதீஷ் பாடல் பாடி மாணவ, மாணவியரின் பாராட்டுக்களை பெற்றனர்.

இந்தியன் பப்ளிக் பள்ளி மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோர் பதில் அளித்தனர். விழாவில், இந்தியன் பப்ளிக் பள்ளி நிர்வாக இயக்குநர் சிவக்குமார் மற்றும் கிருத்திகா சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x