

வீடுகளில் சூரியசக்தி மின் உற்பத்தி அமைப்பை நிறுவ தமிழகத்தில் 3,300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 1,200 பேர் அரசு மானியமும் பெற்று, அவர்களது வீடுகளில் மின் உற்பத்தியும் தொடங்கிவிட்டது.
மரபுசார்ந்த மின் உற்பத்தியை விட புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக்கு உலகம் முழுவதும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகமும் விதிவிலக்கு அல்ல. தமிழகத்தில் 12 ஆயிரம் காற்றாலைகள் நிறுவப்பட்டு 7,500 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஜூன் மாதத்தில் மின் தேவை அதிகரிக்கும்போது காற்றாலை மின்சாரம்தான் மின்வாரியத்துக்கு கைகொடுக்கிறது.
இதுதவிர, காஸ் மற்றும் சூரிய மின்சக்தியும் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. சூரிய மின்சக்திக்கு என பிரத்யேகமாக சூரிய மின்சக்தி கொள்கையை தமிழக அரசு கடந்த 2012-ல் வெளியிட்டது. இதன்படி, சூரிய மின்சக்தி உற்பத்தி மையங்கள் நிறுவும் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதற் கான ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகின்றன. சமீபத்தில்கூட அதானி நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 2,000 மெகாவாட் சூரிய மின்சாரத்தை கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இதுமட்டுமின்றி, வீடுகளில் சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தையும் தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் மானியமும் கிடைக்கிறது. வீடு களுக்கு அதிகபட்சம் ஒரு கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி பேனலுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் குறைந்தபட்சம் 4 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இதைக் கொண்டு வீட்டில் 4 டியூப்லைட், 2 மின்விசிறி, ஒரு டிவி இயக்கமுடியும்.
வீடுகளில் சூரிய மின்சக்தி அமைப்பு நிறுவ, ரூ.47 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவாகும். இதில் ரூ.20 ஆயிரத்தை தமிழக அரசு மானியமாக அளிக்கிறது. இதற்கு தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணையதளத்தில் (teda.in) விண்ணப்பிக்கலாம். வீடுகளில் சூரிய மின்சக்தி அமைப்பு நிறுவ தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தொடர்ந்து பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதுகுறித்து எரிசக்தித் துறை அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
காற்று அதிகம் வீசும் சீசனில் மட்டுமே காற்றாலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். அதே நேரம், சூரிய வெப்பம் சராசரியாக ஆண்டுக்கு 300 நாட்கள் கிடைக்கும். எனவே, காற்றாலைகள் வைத்திருப் பவர்களும் அதன் அருகில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவ விரும்புகின்றனர். இரண்டையும் இணைத்து நிறுவும்போது மின்உற்பத்தியும் அதிகரிக்கும்.
தமிழகத்தில் சூரிய மின்சக்தி அமைப்புகளை வீடுகளில் நிறுவ 3,300 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 1,200 பேர் பணிகளை முடித்து மானியமும் பெற்றுவிட்டனர். தற்போதைய சூழலில் 1,200 வீடுகளில் 5,000 முதல் 5,400 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. எஞ்சியுள்ளவர்களின் வீடுகளில் பணிகள் நடந்துவருகின்றன.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.