

சென்னை
மறைந்த திமுக தலைவர் கருணா நிதியால் ‘ஆயிரம் விளக்கின் அற்புத விளக்கு' என்று பாராட்டப்பட்ட, திமுக தலைமை அலுவலக முன்னாள் செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ஏ.எம்.உசேன் நேற்று காலமானார். அவருக்கு வயது 80.
எஸ்.ஏ.எம்.உசேன், காஞ்சிபுரம் மாவட்டம் ஒலிமுகமதுபேட்டையில் பிறந்தவர். உசேன் சிறுவனாக இருக்கும்போதே அவரது குடும்பம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதி யில் குடியேறிவிட்டது. சிறுவய திலேயே திமுகவில் இணைந்த அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் வட்டச் செயலாளர் ஆனார். அதன் பிறகு ‘ஆயிரம் விளக்கு உசேன்' என்பது அவரது அடையாளமாக மாறிவிட்டது.
49 ஆண்டுகள் திமுக தலைவ ராகவும் 5 முறை முதல்வராகவும் இருந்த கருணாநிதி எப்போதும் கட்சி நிர்வாகிகளிடமும் தொண்டர் களுடனும் நெருங்கியத் தொடர்பில் இருப்பவர். கருணாநிதியை சந்திக்க வரும் நிர்வாகிகள், தொண்டர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆயிரம் விளக்கு உசேனை தெரியாமல் இருக்க முடியாது.
வட்டச் செயலாளராக இருந்த உசேன், தனது கடும் உழைப்பால் கருணாநிதியைக் கவர்ந்தார். அதனால் ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் பதவி அவருக்குத் தரப்பட்டது. எப்போதும் சைக்கிளில் வலம் வரும் அவர் கட்சிக்காக கடுமையாக உழைத்தவர். தனது பகுதிக்குள் மட்டும் நின்று விடா மல் திமுக தலைமை அலுவலக மான அண்ணா அறிவாலயம், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் என திமுக தொடர்புடைய அனைத்து இடங்களிலும் உசே னைப் பார்க்க முடியும் என்கிற அளவுக்கு அவர் கட்சிக்காக உழைத்தார்.
வட்டச் செயலாளர், பகுதிச் செயலாளர், மாவட்ட துணைச் செயலாளர், கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர், தலைமை அலுவலகச் செயலாளர் என திமுகவில் பல்வேறு பொறுப்பு களை வகித்தவர். தலைமை அலுவலகச் செயலாளராக இருக் கும்போது திமுகவினரிடையை ஆயிரம் விளக்கு உசேன் என்ற பெயர் மிகவும் பிரபலம். காரணம் ஒரு நாளைக்கு குறைந்தது 18 மணி நேரமாவது அண்ணா அறிவாலயத்தில் இருப்பார் என்கிறார்கள் அவருடன் கட்சிப் பணியாற்றிய திமுகவினர்.
அவர் தலைமை அலுவலகச் செயலாளராக இருக்கும்போது கருணாநிதி அண்ணா அறிவாலய வளாகத்தில் நாள்தோறும் காலை 6 மணியளவில் நடைபயிற்சி மேற் கொள்வார். அவர் அதிகாலையில் அறிவாலயத்தில் காரில் வந்திறங் கும்போது உசேன்தான் வர வேற்பார். அதுபோல மீண்டும் காலை 11 மணியளவில் அறிவா லயம் வரும்போதும், மீண்டும் திரும்பும்போது வரவேற்கவும் வழியனுப்பவும் உசேன் இல்லாமல் இருந்ததில்லை. அந்த அளவுக்கு கருணாநிதி மீது தீராத பற்று கொண்டிருந்தார்.
இதயத்தில் இடம் பிடித்தவர்
என்றாவது ஒரு நாள் உடல்நிலை காரணமாக உசேன் வராவிட்டால் கருணாநிதி அவரைப் பற்றி விசாரித்து வரச்சொல்லி விடுவார். உசேன் இல்லாவிட்டால் அவரைப் பற்றி விசாரிக்காமல் ஒருநாளும் கருணாநிதி அறிவாலயத்துக்குள் நுழைந்ததில்லை என்கிறார்கள் அவருடன் பழகியவர்கள். அந்த அளவுக்கு கருணாநிதியின் இத யத்தில் இடம் பிடித்தவர்.
கட்சிப் பணிகளில் ஒன்றிவிடும் உசேன், எப்போதும் சைக்கிளில் சென்று வருவதை கேள்விப்பட்ட கருணாநிதி அவருக்கு ஸ்கூட்டர் வாங்கி கொடுக்க ஏற்பாடு செய் தார். அதற்கு ஒரு விழா நடத்தி தானே ஸ்கூட்டரை உசேனிடம் வழங்கினார். அந்த விழாவில் பேசிய கருணாநிதி, உசேனின் உழைப்பை, கட்சி மீதும் கட்சித் தலைவரான தன் மீதும் கொண்டுள்ள பற்றை உருக்கமாக விவரித்ததோடு ‘ஆயிரம் விளக்கின் அற்புத விளக்கு' என பாராட்டினார்.
எளிமையான வாழ்க்கை
கருணாநிதி மட்டுமல்ல இன் றைய திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் உள்ளிட்ட அவரது குடும் பத்தினரின் நன்மதிப்பையும் பெற்ற வர் உசேன். உசேன் குறித்து அவ ரோடு நெருங்கிப் பழகிய முன்னாள் அமைச்சர் ரகுமான்கானிடம் கேட்ட போது, ‘‘கருணாநிதி இருக்கும் இடங்களில் எல்லாம் உசேனை பார்க்க முடியும். அவரது உழைப் புக்குப் பரிசாக 2001 தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் அவரை கருணாநிதி நிறுத்தினார். அங்கு வென்று எம்எல்ஏவானார். கருணாநிதிக்கு மிகவும் நெருக்க மானவராக இருந்தும், எம்எல்ஏ வாகவும் கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தும் அவர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். கடைசி வரை அரசு குடியிருப்பில்தான் வசித்தார்’’ என்று நினைவு கூர்ந்தார்.
உசேனின் மருமகனும் திமுக வின் கலை இலக்கிய பகுத்தறி வுப் பேரவையின் மாநிலச் செய லாளருமான இறையன்பன் குத்தூஸிடம் பேசியபோது, ‘‘குடும் பத்தைவிட திமுகவும் கருணா நிதியும்தான் அவருக்கு உயிர் மூச்சாக இருந்தது. கருணாநிதியும் அவர் மீது மிகுந்த பிரியம் கொண்டிருந்தார். ஸ்டாலின் மீதும் அவருக்கு பாசம் அதிகம். திமுக மீதான அவரது ஈடுபாட்டை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அவருக்கு வாழ்க்கையே திமுகதான்" என்றார்.
உசேன் போன்ற தன்னலம் கரு தாத தொண்டர்களின் உழைப்பும் விசுவாசமும்தான் தொடர்ந்து 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லா விட்டாலும் கட்சியை கட்டுக் கோப்பாக வைத்திருக்க கருணா நிதிக்கு உதவியது. திமுகவின் தொண்டர் ஒருவர் எப்படி இருப்பார் என்பதற்கு உதாரணமாக இருந்தவர் உசேன். அவரது மறைவு கட்சிக்கு பேரிழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.
ஸ்டாலின் நேரில் அஞ்சலி
சென்னை லாயிட்ஸ் காலனி இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உசேன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். உசேனின் மனைவி மைதீன் பாத்திமா 15 ஆண்டுகளுக்கு முன்பே கால மாகிவிட்டார். அவருக்கு இரு மகள் களும் இரு மகன்களும் உள்ள னர். அவரது உடல் நேற்று மாலை 6 மணிக்கு நல்லடக்கம் செய்யப் பட்டது.