Published : 06 Aug 2019 05:58 PM
Last Updated : 06 Aug 2019 05:58 PM

காஷ்மீர் விவகாரம்: என்ன சொல்கிறார்கள் தமிழகத் தலைவர்கள்?

கடந்த 70 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அதிகாரங்கள் மற்றும் உரிமைகளை வழங்கி வந்த அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்யவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கவும் வழிகோரும் சட்டத்திருத்த மசோதா, நேற்று (ஆகஸ்ட் 5) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது.

சட்டப்பிரிவு 370-ன் படி, காஷ்மீரில் உள்துறை, ராணுவம், தகவல் தொடர்பு தவிர்த்து மற்ற எந்த விவகாரத்திலும் மத்திய அரசு தலையிட முடியாது. மேலும்,மேற்கண்டவற்றைத் தவிர்த்து மற்ற சட்டங்களை ஜம்மு காஷ்மீரில் நிறைவேற்ற அம்மாநில சட்டப்பேரவையின் ஒப்புதல் கட்டாயம். இந்த திருத்த மசோதாவால் காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட இத்தகைய கூடுதல் உரிமைகள் இழக்கப்பட்டுள்ளன. மேலும், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் இயங்கும் யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது.

இம்மசோதாவை, சிவசேனா, பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதா தளம், அதிமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் ஆதரித்தனர். காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் எதிர்த்தனர்.

தீவிரவாதம் மட்டுப்படுத்தப்படும், பொருளாதாரம் பெருகும், மக்களிடையே ஒற்றுமை ஏற்படும், என பாஜக இம்மசோதாவின் பலன்களாகச் சொல்கிறது. மசோதாவுக்கான அவசரம், அதனை நிறைவேற்றுவதற்கு பாஜக கையாண்ட வழிமுறைகள் உள்ளிட்டவற்றை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.

ஏன், இந்த மசோதாவை நிறைவேற்றியதில் இவ்வளவு அவசரம், இதனால் காஷ்மீர் பிரச்சினைகளில் என்ன மாற்றங்கள் நிகழும் என, தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் கேள்வி எழுப்பினோம்.

வானதி சீனிவாசன்: கோப்புப்படம்

"தேசப் பாதுகாப்பைக்கூட நான் அடுத்தகட்டமாக வைத்துக்கொள்கிறேன். முதலில், பொருளாதார ரீதியாக காஷ்மீர் மக்கள் முன்னேற இது வழிவகையாக இருக்கும். அம்மக்கள், தங்கள் படிப்புக்கு ஏற்ற வேலைவாய்ப்பை அங்கு பெற முடியவில்லை. தொழில்நுட்பக் கல்லூரியோ, ஆராய்ச்சி நிறுவனமோ பெரிய அளவில் இல்லை. முதலீடு செய்ய முடிவதில்லை. ஏழைக் குழந்தைகளால் வெளியில் வந்து படிக்க முடியாது. ஏழைக் குழந்தைகளுக்கான அத்தனை வாய்ப்புகளையும் சட்டப்பிரிவு 370 தடுத்துக்கொண்டிருந்தது. இந்த நிலைமை மாறும்.

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில் தீவிரவாதம் குறையவில்லை. பொருளாதார ரீதியாக உயராததால் தான், அவர்கள் மாற்று வழிகளில் செல்கின்றனர். பாஜக அரசின் இந்த முடிவு, நாட்டின் ஒற்றுமைக்கும் பலம் கொடுக்கும். காஷ்மீர் மக்களின் உயர்வுக்கும் வழிவகுக்கும். இதனை 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' என எடுத்துக்கொள்ளலாம். சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது தான். இச்சட்டம், காஷ்மீர் மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்காக ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு கொடுக்கப்பட்ட சட்டம். இன்று வரைக்கும் அது தீவிரவாதத்திற்கு வழிவகுத்ததே தவிர, தேசிய நீரோட்டத்தில் இணைக்க ஒன்றும் செய்யவில்லை. மத்திய அரசு நிதி ஒதுக்கி, காஷ்மீரில் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துகிறது. ஆனால், இதுவரைக்கும் மத்திய அரசுக்கு கிடைத்தது கல்லெறிதலும், குண்டெறிதலும் தான்.

பெரும்பான்மையான மக்கள் அமைதியை விரும்பினாலும், அங்குள்ள அரசியல் கட்சிகளும், தீவிரவாதிகளும் மக்கள் அதனைப் பெற முடியாமல் பார்த்துக்கொண்டார்கள். ஜனநாயக நாடான இந்தியா, தன் நாட்டின் ஒரு பகுதியில் அமைதியின்மை நிலவுவதை அதிக காலம் பார்த்துக்கொண்டிருக்காது", என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது குறித்து ஏன் காஷ்மீர் மக்களின் கருத்து கேட்கப்படவில்லை என கேள்வி எழுப்பியதற்கு, "மக்களுக்கு என்ன தேவையோ அதை நிறைவேற்றுவதற்கான அனைத்து அதிகாரங்களும் நாடாளுமன்றத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜம்முவில் இருக்கக்கூடிய 3-ல் இரண்டு பங்கு மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என விரும்பினார்கள். ஜம்மு-லடாக்கில் இந்த கோரிக்கை இருந்திருக்கிறது" என பதிலளித்தார்.

யூனியன் பிரதேசங்கள் குறைவான அதிகாரங்கள் காரணமாக, மாநில அந்தஸ்து கோரும் போது, காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது, மத்திய அரசின் முழு அதிகாரத்தில் அவை இரண்டும் இயங்குவதற்கு வழிவகுக்காதா என வானதி சீனிவாசனிடம் கேள்வி எழுப்பினோம்.

அதற்கு, "ஒரு அரசாங்கத்திற்கு நிர்வாக வசதிக்கேற்ப, தனக்குள்ளாக எல்லைகளைப் பிரிப்பதற்கும் மாற்றிக்கொள்வதற்கும் சகல அதிகாரமும் உண்டு. நிறைய மாநில அரசுகள் இத்தனை ஆண்டுகள் செய்துவந்த செயல்பாடுகளில் இப்போது சீர்திருத்தம் தேவைப்படுகிறது. அதனால் மத்திய அரசுக்கு அதிக அதிகாரங்கள் தேவைப்படுகிறது.

காஷ்மீர் பிரச்சினையை மோசமான நிலைமைக்கு எடுத்துச் சென்றது பிரதமர் நேரு தலைமையிலான காங்கிரஸ். அதனை இன்று வரை, காங்கிரஸ் வாக்கு வங்கிக்காக மக்களை மனதளவில் பிரித்தார்கள். அதற்கான விலைதான், லட்சக்கணக்கான மக்களை தீவிரவாதத்திற்கு பலி கொடுத்திருக்கிறோம். எல்லா மாநிலங்களுக்கும் தனித்துவம் உண்டு. மாநில அரசுக்கு அதிகாரம் குறைக்கப்படுவது, கூட்டப்படுவதால் மாநிலங்களின் தனித்துவம் என்றும் மாறாது", என ஒட்டுமொத்த பாஜகவின் குரலாக வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

இம்மசோதாவை தமிழகத்திலிருந்து அதிமுக மட்டும்தான் ஆதரித்தது. மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் நவநீத கிருஷ்ணன், இம்மசோதாவை ஆதரித்துப் பேசினார். பாஜக கொண்டு வரும் அனைத்து மசோதாக்களையும் அதிமுக ஆதரித்து வரும் நிலையில், இம்மசோதாவையும் ஆதரித்தது ஏன் என, நவநீத கிருஷ்ணனிடம் கேட்டோம்.

நவநீத கிருஷ்ணன்: கோப்புப்படம்

"இந்த நிலைப்பாடு, அதிமுக தலைமையினுடையது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்காக, எப்போதும் வலுவான குரல் எழுப்பியவர். காஷ்மீரின் சிக்கல்களைப் புரிந்துகொண்டு அதனைச் சரிசெய்வதற்காக மத்திய அரசு இதனைக் கொண்டு வந்துள்ளது. சட்டப்பிரிவு 370 காரணமாகத்தான் காஷ்மீர் மக்களால் முன்னேற முடியவில்லை. ஜெயலலிதாவின் கொள்கைப்படி, இதனை அதிமுகவும், அதிமுக அரசும் ஆதரித்திருக்கிறோம். அதில், எதுவும் தவறில்லை. இம்மசோதாவில் எந்த சட்ட விதிமீறல்களும் நடைபெறவில்லை.

இதில், மாநில சட்டப்பேரவையின் கருத்து கேட்கப்பட வேண்டும் என்பதுதான் விதி. ஆனால், இப்போது ஜம்மு-காஷ்மீரில் மாநில சட்டப்பேரவை கிடையாது. அதனால், அம்மாநிலத்தின் எல்லா அதிகாரங்களும் நாடாளுமன்றத்திற்குத்தான் இருக்கின்றன. மத்திய அரசு, ஒவ்வொரு மாநிலத்தின் தனித்தன்மைக்கும் இடையில் குறுக்கே நிற்கவில்லை என அமித் ஷா கூறியிருக்கிறார்", என்றார்.

காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததால், மாநில சுயாட்சி, மாநிலங்களின் அதிகாரம் பாதிக்கப்படாதா என கேட்டதற்கு, "பாகிஸ்தானின் தலையீடு, தீவிரவாதிகளின் ஊடுருவல் இவற்றால், இந்திய இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும். எல்லா விஷயத்தையும் ஒரே கோணத்தில் பார்க்கக் கூடாது. மீண்டும் மாநில அதிகாரம் வழங்கிவிடுவோம் என அமித் ஷா தெரிவித்திருக்கிறார். காஷ்மீர் மாநிலத்தை முன்னேற்றும் வரைக்கும்தான் இந்த நடைமுறை. இதனால், மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு பறிக்கிறது என்பது தவறு", என நவநீத கிருஷ்ணன் பதிலளித்தார்.

அதிமுக, பாஜக தவிர்த்து தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றன. திமுகவில் நேற்று மாநிலங்களவையில் திருச்சி சிவா, இன்று மக்களவையில் டி.ஆர்.பாலு ஆகியோர் கடுமையாக எதிர்த்து, பல்வேறு கேள்விகளை மத்திய அரசை நோக்கி எழுப்பினர்.

ஆர்.எஸ்.பாரதி: கோப்புப்படம்

இம்மசோதா தொடர்பாக நம்மிடம் பேசிய, மாநிலங்களவை திமுக உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, "இதனை ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் பாஜக கொண்டு வந்துள்ளது. விவாதித்து நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கலாம். இதில், என்ன அவசரம்? எல்லா மசோதாக்களையும் அவசர அவசரமாக நிறைவேற்றுகின்றனர். ஏதோ ஒன்று செய்ய காத்திருக்கின்றனர். அது என்ன என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காஷ்மீர் பிரச்சினையை சோதனை ஓட்டமாக விட்டிருக்கின்றனர். ஒரு பெரிய வெற்றிக்குப் பிறகுதான் இந்திராகாந்தி எமர்ஜென்சியை துணிச்சலாகச் செய்தார். அதன்பிறகு தோல்வியைத் தழுவினார். அதேபோன்று தான் இப்போது மோடியும் செயல்படுகிறார். இந்திரா காந்தி நிலைமைப் போல், அடுத்த தேர்தலில் மோடி தோற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை", எனத் தெரிவித்தார்.

நேற்று மாநிலங்களவையில் பேசிய வைகோ, காஷ்மீர் பிரச்சினை தீவிரமாக காங்கிரஸ் கட்சிக்கும் பங்குண்டு என கூறினார். இதுகுறித்து பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, "வைகோவின் கருத்து வேறு, எங்களின் கருத்து வேறு. காங்கிரஸ் ஸ்லோ பெடல் போட்டது. இவர்கள் அவசரமாகச் செய்கின்றனர், அதுதான் வித்தியாசம்" எனக் கூறினார்.

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸின் அணுகுமுறையும் தவறானது என வைகோ விமர்சித்தது குறித்து கேட்டபோது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அக்குற்றச்சாட்டை மறுத்துவிட்டார்.

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

"காங்கிரஸ் என்ன தவறு செய்தது என வைகோ சொல்லட்டும். வைகோவும் பாஜகவும் ஒரே மாதிரி பேசுகின்றனர். எப்போதும் தத்துவத்தில் தீவிர வலதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும், ஒரே மாதிரியாக பேசுகின்றனர். அவர்கள் துப்பாக்கியின் இரு முனைகளாக இருக்கின்றனர்.

காஷ்மீரின் வரலாற்றைப் படித்தால், ஜவஹர்லால் நேரு எவ்வளவு அறிவுப்பூர்வமாக செயல்பட்டிருக்கிறார் என்பது தெரியும். காஷ்மீர் பிரச்சினையை உணர்வுப்பூர்வமாக பார்ப்பதற்குப் பதிலாக அறிவுப்பூர்வமாகத்தான் பார்க்க வேண்டும். காஷ்மீர் மன்னர் ஹரி சிங், காஷ்மீர் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்பினார். ஆனால், அதனைப் புரிந்துகொண்ட ஜவஹர்லால் நேரு வி.கே.மேனனை அனுப்பி, இந்தியாவுடன் சேர்வதுதான் காஷ்மீரிகளுக்கு பயனளிக்கும் என்பதை எடுத்துச் சொல்லி, ஜம்முவில் அவர் முகாமிட்டிருந்தபோது, அங்கு சென்று கையெழுத்து வாங்கச் செய்தார்.

அந்த சமயத்தில் ஜின்னா, காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களுக்கு மத உணர்வைப் புகுத்தி, காஷ்மீரிகள் இந்தியாவில் இருப்பதை விட, பாகிஸ்தானில் இருப்பதுதான் சரி என்று சொல்லி, அவர்களுக்கு மூளைச்சலவை செய்த போது 'காஷ்மீரத்து சிங்கம்' ஷேக் அப்துல்லா தைரியமாக எழுந்து, காஷ்மீர் இந்தியாவுடன் தான் இருக்க வேண்டும், அங்குதான் ஜனநாயகம் இருக்கும் என உரத்த குரல் எழுப்பினார். அதனால், ஜின்னாவின் குரல் எடுபடவில்லை. ஷேக் அப்துல்லாவின் முடிவுக்கு காஷ்மீர் மக்கள் உடன்பட்டனர். இது, ஜவஹர்லால் நேருவின் மிகப்பெரிய ராஜதந்திரம்.

எப்போதெல்லாம் ஹிட்லருக்கும் முசோலினுக்கும் பிரச்சினை வருகிறதோ, அப்போதெல்லாம், பிற இனங்கள் மீது தாக்குதலைத் தொடுத்தார்கள். அதே பாணியைத் தான் மோடியும் பின்பற்றுகிறார்", என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பாஜகவின் இம்முடிவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இந்தியா சிக்கியிருக்கிறது. மக்களை அதிலிருந்து திசைதிருப்புவதற்கான ஏற்பாடுதான் இது. இந்தியாவின் மதச்சார்பின்மை மீது நம்பிக்கைக் கொண்டுதான் அவர்கள் இந்தியாவுடன் வந்தனர். ஏற்கெனவே உள்ள அந்தஸ்தை பறிப்பதுடன் மட்டுமல்லாமல், சாதாரண முனிசிப்பாலிட்டி போன்று அதனை யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதில் என்ன நியாயம்? இதில், மாநில மக்களுக்கு எந்த உரிமையும் இருக்காது. காஷ்மீரின் மீதான தாக்குதல் இது.

காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சிக்கு பாஜக எதுவும் செய்யவில்லை. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இதனால், அம்மக்களுக்கும் மத்திய அரசுக்கும் பெரிய இடைவெளி உருவாகிவிட்டது. இந்திய எதிர்ப்பு உணர்வாக மாறுவதற்கான ஆபத்து உள்ளது. காஷ்மீர் பிரச்சினையில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியுள்ளனர். இவ்வளவு மோசமாக நிலைமை மாறுவதற்கு, காங்கிரஸின் அணுகுமுறையிலும் தவறு இருக்கிறது”, எனக் கூறினார்.

இரா.முத்தரசன்: கோப்புப்படம்

அதேபோன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், "காஷ்மீர் மக்களிடையே இது அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதனை பாகிஸ்தான் பயன்படுத்தலாம். காஷ்மீர் மக்களின் உரிமைகளை இந்தியா பறித்துவிட்டது என, காஷ்மீர் மக்களைத் தூண்டிவிட பாகிஸ்தான் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சுற்றுலா வந்தவர்கள், அமர்நாத் யாத்திரைக்கு வந்தவர்கள் என எல்லாவற்றையும் அனுப்பிவிட்டு, இதனை ஏன் ரகசியமாகச் செய்ய வேண்டும்? பாஜக தங்களின் கொள்கையை, தங்களுக்குள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி, இது வலுக்கட்டாயமாக திணிக்கிறது", எனக் கூறினார்.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x