Published : 06 Aug 2019 11:02 AM
Last Updated : 06 Aug 2019 11:02 AM

தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க அனுமதிக்க மாட்டோம்: நவநீத கிருஷ்ணன் எம்.பி.

தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க அனுமதிக்க மாட்டோம் என்று அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த 1954-ம் ஆண்டு அரசமைப்புச்சட்டம் 370 பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமை அந்தஸ்தை மத்திய அரசு நேற்று (ஆகஸ்ட் 5) ரத்து செய்தது. அதற்கான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்தார். நீண்ட விவாதத்துக்குப் பின் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்துப் பலரும் ஆதரவும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீத கிருஷ்ணன், ''மத்திய அரசு சரியான நேரத்தில், சிறப்பான கொள்கை முடிவை  எடுத்திருக்கிறது.ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்துள்ளது சரியான நடவடிக்கை. சட்டப்பிரிவு 370 என்பது காஷ்மீருக்கு மட்டுமே பொருந்தும். அங்கு நடக்கும் கலவரங்களை அடிப்படையாக வைத்துத்தான் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஏற்கெனவே ஆந்திரப் பிரதேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகியவை வந்துள்ளன. பெரிய மாநிலங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பார்கள் என்று சொல்லப்படுவது வெறும் அரசியல் காரணங்களுக்காகத்தான். அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. தமிழகம் இரண்டாகப் பிரிக்கப்படமாட்டாது. அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது'' என்றார் நவநீத கிருஷ்ணன்.

முன்னதாக, இதுகுறித்து மாநிலங்களவையில் நவநீதகிருஷ்ணன் பேசுகையில், ''370-வது சட்டப் பிரிவு தற்காலிகமானது தான் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போதைய சூழலில் இது தேவையில்லை என்ற முடிவை ஏற்கிறோம். தேசத்தின் ஒருமைப்பாடு என்பதை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி வந்தார். அவரது வழியில் இதனை அதிமுக ஆதரிக்கிறது'' என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x