Published : 06 Aug 2019 10:27 AM
Last Updated : 06 Aug 2019 10:27 AM

புத்தகத் திருவிழாவும், மண் உண்டியலும்... ஈரோட்டில் மனதை உருக்கிய தொழிலாளி!

ஆர்.கிருஷ்ணகுமார்

அது ஒரு இனிய இரவுப் பொழுது. ஈரோட்டில் புத்தகத் திருவிழா நடைபெறும் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ஒரு ஏழைத் தொழிலாளியும், அவரது குடும்பமும் கையில் ஒரு மண் உண்டியலுடன் நின்றுகொண்டிருந்தனர். புத்தகத் திருவிழாவை நடத்திக் கொண்டிருக்கும் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின்குணசேகரன், அந்தக் குடும்பத்தாரிடம் பேசியபோது, உண்டியலைக் கொடுத்து, "பேரவைக்கு எங்களாலான சிறு உதவி" என்றனர். நெகிழ்ந்த அவர், அங்கிருந்த பேரவை பொறுப்பாளர்களிடம் கொடுத்து, உண்டியல் பணத்தை எண்ணி, அவர்களுக்கு ரசீது கொடுக்குமாறு தெரிவித்தார். ஓராண்டு முழுவதும் அந்தக் குடும்பத்தினர் உண்டியலில் சேமித்துக் கொடுத்த  தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.25,976.

செல்போன், இன்டர்நெட், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்டவை புத்தக வாசிப்பை நசுக்கிக் கொண்டிருக்கின்றன என்றெல்லாம் அங்கலாய்க்கும் சூழலில், ஈரோட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகத் திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டு, தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி வருகின்றனர்.

புத்தக வாசிப்பை நேசிக்க மட்டுமின்றி, மக்களை சுவாசிக்கவும் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் 15-வது ஆண்டாக வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது புத்தகத் திருவிழா. 2005-ல் 75 அரங்குகளுடன் தொடங்கிய புத்தகத் திருவிழா, தற்போது 230 அரங்குகளுடன் விரிவடைந்துள்ளது.

உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டுப் பதிப்பகங்களும் இங்கு அரங்குகளை அமைத்துள்ளன. பிரம்மாண்டமாக நடைபெறும் புத்தகத் திருவிழாவில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

ஒவ்வொரு நாளும் மாலையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், தமிழகத்தின் பெரும்பாலான  சொற்பொழிவாளர்கள் பங்கேற்றுள்ளனர். அப்துல்கலாம் உட்பட தலைவர்கள், அறிஞர்கள், கலைத் துறையினர், சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள்,  இதழாளர்கள் என வெவ்வேறு தரப்பினரும் புத்தகத் திருவிழா மேடையில் பேசியுள்ளனர். உலகம் முழுவதும் உள்ள தமிழ்ப் படைப்பாளிகளின் புத்தகங்களுக்காக `உலகத் தமிழர் படைப்பரங்கம்' என்ற தனி அரங்கு  இங்கு இடம்பெற்றுள்ளது.

ஒவ்வொரு நாளும் புத்தகத் திருவிழாவுக்கு வரும் சொற்பொழிவாளர்களையும், விருந்தினர்களையும் வரவேற்பது முதல், கிளம்பும்போது வழியனுப்புவது வரை பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்த ஸ்டாலின் குணசேகரனிடம் பேசினோம்.

ஜெர்மனியிலிருந்து வந்த தமிழர்!

"மக்களை வாசிக்கச் செய்வதே புத்தகத் திருவிழாவின் நோக்கம். இதன் வீச்சு தமிழகத்தைத் தாண்டி, வெளிநாடுகளையும் சென்றடைந்துள்ளது. இலங்கைத் தமிழரான ஒரு படைப்பாளி, பல ஆண்டுகளுக்கு முன்பே ஜெர்மனியில் செட்டிலாகிவிட்டார். புத்தகத் திருவிழா நடைபெறுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே எங்களை தொடர்புகொண்டு, `ஈரோடு புத்தகத் திருவிழாவைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு வாரத்துக்கு ஈரோட்டில் தங்கி, புத்தகத் திருவிழாவில் பங்கேற்க விரும்பு
கிறேன்' என்று கூறினார். சொன்னதுபோலவே, புத்தகத் திருவிழா தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்பே ஜெர்மனியில் இருந்து ஈரோட்டுக்கு வந்துவிட்டார்.

அதேபோல, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர், மூன்றாவது ஆண்டாக புத்தகத் திருவிழாவில் பங்கேற்க வந்துள்ளார். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் நடப்பாண்டு புத்தகத் திருவிழாவைக் காண வந்துள்ளனர்.

ஒவ்வொரு நாளும் மாலையில் நடைபெறும் `சிந்தனை அரங்கம்' நிகழ்ச்சி கல்வியாளர்களையும், தொழிலதிபர்களையும், அதிகாரிகளையும், சிந்தனையாளர்களையும் மட்டுமின்றி, சாதாரண, ஏழை மக்களையும் பெரிதும் ஈர்த்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் சொற்பொழிவுகளைக் காண வருகின்றனர். பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து ஈரோட்டுக்கு வந்து தங்கி, சொற்பொழிவுகளைக் கேட்கின்றனர்.

நெகிழச் செய்த கிராமத்துப் பெண்!

புத்தகத் திருவிழா லாபம் ஈட்டுவதற்காக நடத்தப்படவில்லை. உண்மையில், ஒவ்வோர் ஆண்டும் பல லட்சம் நஷ்டத்தில்தான் நடக்கிறது. 

ஆனாலும், எந்த மேடையிலும் மக்களிடம் நாங்கள் நன்கொடை கேட்கவில்லை. யாரும் மனமுவந்து மக்கள் சிந்தனைப் பேரவைக்கு நன்கொடை கொடுத்தால் மட்டும் ஏற்றுக்கொள்கிறோம். இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் புத்தகத் திருவிழாவில் ஒரு சொற்பொழிவாளர் எங்கள் நிலையை சுட்டிக் காட்டினார். புத்தகத் திருவிழாவில் குமாரபாளையம் அருகேயுள்ள ஒரு கிராமத்திலிருந்து வரும் ஒரு பெண் கலந்துகொண்டு, தினமும் சொற்பொழிவுகளைக் கேட்டுள்ளார். ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள அவர் இதைக்கேட்டுவிட்டு, ஏதாவது செய்ய வேண்டுமெனக் கருதியுள்ளார். பின்னர் ஒருநாள் மக்கள் சிந்தனைப் பேரவை அலுவலகம் வந்த அவர், ரூ.1 லட்சம் அளித்தார். 'ஐயா, எனது கணவர் விபத்தில் இறந்துவிட்டார். நீதிமன்ற உத்தரவு மூலம் எனக்கு கொஞ்சம் இழப்பீடு கிடைத்தது. அதில் ரூ.1 லட்சத்தை மக்கள் சிந்தனைப் பேரவைக்கு அளிக்கிறேன். கணவர் இறந்ததில் மனமுடைந்திருந்த எனக்கு, புத்தகத் திருவிழா சொற்பொழிவுகளே புரிதலை ஏற்படுத்தின. நான் மனமுவந்து தரும் இந்த தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள்' என்றார் கலங்கிய கண்களுடன்.

இதேபோல, ஒரு சாதாரண தொழிலாளி, தனது குடும்பத்தாருடன் மண் உண்டியலில் பணம் சேர்த்து, ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாவில் கொண்டுவந்து கொடுப்பார். நடப்பாண்டு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு வந்த அவர், வழக்கம்போல உண்டியலைக் கொடுத்தார். அதில் ரூ.25,976 இருந்தது. இப்படி, மிகச் சாதாரண மக்கள் உள்ளிட்டோரின் பங்களிப்புடன்தான் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது.

நூல் ஆர்வலராகும் மாணவர்கள்!

பள்ளி மாணவ, மாணவிகளிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ரூ.250-க்கு மேல் புத்தகங்களை வாங்கும் மாணவர்களுக்கு `நூல் ஆர்வலர்' என்ற சான்றிதழ் வழங்குகிறோம். கடந்த ஆண்டு மட்டும் 60 ஆயிரம் மாணவர்களுக்கு இச்சான்றிதழ் வழங்கியுள்ளோம்.

அதேபோல, `புத்தக சேமிப்பு உண்டியல்' என்ற திட்டத்தில், ரூ.12 மதிப்பிலான உண்டியலை பள்ளி மாணவர்களுக்கு ரூ.5-க்கு கொடுக்
கிறோம். ஆண்டுமுழுவதும் அந்த உண்டியலில் சேர்க்கும் பணத்தை இங்கு கொண்டுவந்து, அதற்கு மாணவர்கள் புத்தகங்கள் வாங்கிச் செல்கின்றனர். புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்களிடம் பேசி, மாணவர்களுக்கு கூடுதலாக தள்ளுபடி வழங்குகிறோம். புத்தக வாசிப்புடன், சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

புத்தக அலமாரித் திட்டம்!

அதேபோல, தான் படித்த பள்ளி அல்லது தனக்குப் பிடித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய விரும்புவோருக்காக `புத்தக அலமாரித் திட்டத்தை' செயல்படுத்துகிறோம். பள்ளிக்கு ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் மதிப்பில் புத்தக அலமாரியும், அந்தப் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டே தேர்வு செய்யப்பட்ட புத்தகங்களையும், நன்கொடையாளர் கையாலேயே புத்தகத் திருவிழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம் ஒப்படைக்கிறோம். இந்த நூலகத் திட்டம், வேறெந்த புத்தகத் திருவிழாவிலும் செயல்படுத்தப்படுவதில்லை. இதுவரை சுமார் 200 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, பெரிய தொழில் நிறுவனங்களை அணுகி, நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.100 வழங்குமாறு கேட்டுப்பெற்று, அந்த தொகைக்கு புத்தகங்களை வாங்கித் தருகிறோம்.  இதற்கு `தொழிலாளர் புத்தகத் திட்டம்' என்று பெயர்.
புத்தகத் திருவிழாவில் `படைப்பாளர் மேடை'  என்ற நிகழ்ச்சியில், பிரபல எழுத்தாளர்களை, வாசகர்களுடன் கலந்துரையாடச் செய்கிறோம். சென்னைக்கு அடுத்தபடியாக, புத்தகத் திருவிழாவுக்காக புதிய புத்தகங்களை அச்சிடுவதும், வெளியிடுவதும் ஈரோடு புத்தகத் திருவிழாவில்தான். 

இப்படி மக்களிடம் புத்தகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், வாசிப்புப் பழக்கத்தை மேம்படச் செய்யவும் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொள்கிறோம். இந்த திட்டங்களின் ஒட்டுமொத்த நோக்கமே வாசிப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவதாகும்" என்கிறார் நம்பிக்கையுடன் ஸ்டாலின் குணசேகரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x