Published : 06 Aug 2019 10:22 AM
Last Updated : 06 Aug 2019 10:22 AM

நிரம்பியது பில்லூர் அணை!- பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை

தமிழக-கேரள எல்லையோரம் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பியது. அணையின் பாதுகாப்புக் கருதி, அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படுவதால், பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் அதிகரித்துள்ள நீர்வரத்தால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழகம் மற்றும் கேரள காடுகளை நீர்ப்பிடிப்புப்  பகுதிகளாக கொண்டுள்ள பில்லூர் அணையின் மொத்த நீர்மட்டம் 1000 அடியாகும். பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் நீரை ஆதாரமாகக் கொண்டே,  கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 15-க்கும் மேற்பட்ட குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை தள்ளிப்போனதால், பில்லூர் அணையின் நீர்மட்டம் குறைந்தே இருந்தது. இதனால், குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டதுடன்,  அணையில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்திலும், மின் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், அணையின் நீர்ப்பிடிப்புப்  பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால், அணையின் நீர்வரத்து மளமளவென உயரத் தொடங்கியது. கடந்த  3-ம் தேதி அணையின் நீர்மட்டம் 79 அடியாக இருந்த நிலையில், தொடர் நீர்வரத்தால் நேற்று காலை  நீர்மட்டம் 94 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியைத் தாண்டியது. இதையடுத்து, நேற்று பிற்பகலில் அணையின் நீர்மட்டம் 97.50 அடியாக உயர்ந்தது.

அணையின் பாதுகாப்பு கருதி, அணையின் உபரி நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டது. அணையின் நான்கு மதகுகள் வழியே விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு,  கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர், பாதுகாப்பான இடங்களுக்குச்  செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியின் அறிவிப்பையடுத்து, காவல் துறை மற்றும் பொதுப்பணித் துறை சார்பில், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பவானி ஆற்றில் யாரும் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது என்று  தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பவானி ஆற்றில் பாயும் தண்ணீர், மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையைச் சென்றடையும். பவானி ஆற்றில் விநாடிக்கு 18 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால், பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

மீனவர்கள் மகிழ்ச்சி!

மேட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப்  பகுதிகளில் வழக்கமாக பெய்ய வேண்டிய பருவ மழையின் அளவு நடப்பாண்டு குறைந்து காணப்பட்டாலும், பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்புப்  பகுதிகளில் பெய்யும் மழையால், ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன், இங்குள்ள குளம் குட்டைகளும் நிரம்பத் தொடங்கியுள்ளன.

காரமடை கூட்டுறவு சங்கத்துக்கு உட்பட்ட பெள்ளாதி, அன்சூர் குளங்களில் நீர் நிரம்பியுள்ளதால், இந்தக் குளங்களின் மீன்களைப்  பிடிக்க மீனவர்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்

களாக உள்ள மீனவர்கள் முறைப்படி விண்ணப்பித்து அனுமதி பெற்று, பரிசல்களில் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இங்குள்ள குளங்களில் ஜிலேபி, மிர்கால், ரோகு, அவுரி வகை மீன்கள் கிடைக்கின்றன. மாலை நேரத்தில் குளத்து நீருக்குள் வலைகளைக் கட்டும் மீனவர்கள்,  அடுத்த நாள் அதிகாலை முதல் பரிசல்களில் சென்று, வலையில் சிக்கியுள்ள மீன்களை சேகரித்து கரைக்கு கொண்டு வருகின்றனர். பின்னர் மீனின் வகைகளைப் பிரித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

கடந்த பல மாதங்களாக போதிய மழையின்மை மற்றும் கோடை வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு கிடந்தன. இதனால், இப்பகுதியில் மீன்பிடித் தொழில் முடங்கியிருந்த நிலையில், தற்போது மீண்டும்  மீன்பிடிப் பணிகள் தொடங்கியுள்ளது இப்பகுதி மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம் பகுதியில் புதிதாகப்  பிடிக்கப்பட்ட, சுவையான குளத்து மீன்களை வாங்க அசைவப் பிரியர்கள் பெரிதும் ஆர்வம் காட்டுவதால், சரியான விலையும் கிடைப்பதாக கூறுகின்றனர் இப்பகுதி மீனவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x