Published : 06 Aug 2019 10:19 AM
Last Updated : 06 Aug 2019 10:19 AM

மாநகராட்சி பள்ளிக்கு வகுப்பறை நூலகம்: விடுமுறைக்கு வரும்போதெல்லாம் அரசுப் பள்ளிகளுக்கு உதவும் மதுரை பெண்

வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டாலும்கூட விடுமுறையில் சொந்த ஊர் வரும்போதெல்லாம் தனது ஊரில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்களை வாங்கித் தந்து மகிழ்கிறார் மதுரை பெண் ஒருவர்.

மதுரை ஆத்திக்குளத்தைச் சேர்ந்தவர் ஜாஸ்மின். இவர் சார்ஜாவில் வசித்து வருகிறார். அண்மையில் மதுரை வந்த இவர், மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் வாசிப்பு திறனை அதிகரிக்கும் வகையில் கைலாசபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இலவசமாக வகுப்பறை நூலகம் அமைத்துக் கொடுத்துள்ளார்.  

மதுரையைச் சேர்ந்த அரசு உதவிபெறும் தலைமை ஆசிரியர் சரவணன் என்பவர், 'நூல் வனம்' என்ற அமைப்பு மூலம், அரசு மற்றும் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் வாசிப்பு திறனை ஊக்கவிக்க நன்கொடையாளர்கள் உதவியுடன் வகுப்பறை நூலகங்கள் அமைத்துக் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் இன்று மதுரை , கைலாசபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு  சார்ஜாவில் வசிக்கும் மதுரை ஆத்திக்குளத்தை சேர்ந்த ஜாஸ்மின், வகுப்பறை நூலகம் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். 

சார்ஜாவில் குடும்பத்துடன் வசிக்கும் இவர், மதுரைக்கு விடுமுறை நாட்களில் வரும்போதெல்லாம் இதுபோல் அரசு பள்ளிகளுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வாங்கிக் கொடுப்பது, ஏழைக் குழந்தைகள் கல்விக்கு உதவி செய்வது உள்ளிட்ட சேவையை செய்து வருகிறார். 
அவர் இந்த உதவிகளை தன்னுடைய 'சார்ஜா கிரீன் குளோப்' என்ற நிறுவனத்தின் உதவியுடன் செய்து வருகிறார். 

கைலாசபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில்  ஜாஸ்மின் உதவியால் உருவாக்கப்பட்ட வகுப்பறை நூலகம் தொடங்கப்பட்டது.  ஜாஸ்மின் தலைமை வகித்து குழந்தைகளுக்கு புத்தகங்களை வழங்கி தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியரும், 'நூல் வனம்' அமைப்பு ஒருங்கிணைப்பாளருமான க.சரவணன் கலந்து கொண்டார். 

மாநகராட்சிப் பள்ளி தலைமையாசிரியை பாண்டீஸ்வரி வரவேற்றார். வகுப்பறை நூலகம் அமைக்க புத்தகங்கள் வழங்கி பேசிய சார்ஜா ஜாஸ்மின் , "புத்தகங்கள் அறிவை திறக்கும் ஞான ஊற்றுகள். புத்தகங்கள் சிறந்த நண்பன்.  இந்த புத்தகங்கள் குழந்தைகளுக்கு கிடைக்க காலம் தாழ்த்தக்கூடாது. குழந்தைகள் பருவத்திலே வாசிப்பு பழக்கம் உருவானால் பிற்காலத்தில் அவர்கள் கல்வியில் மட்டுமில்லாது வாழ்விலும் அறிவிலும் மேம்பட்டவர்களாக மாறுவார்கள்.

காந்தி , நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள் புத்தகங்கள் படிப்பதை நேசித்தனர். அதனால், புத்தகங்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x