

சென்னை
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு புதுவரவாக குவாஹாட்டியில் இருந்து காண்டாமிருகம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மெட்ராஸ் உயிரியல் பூங்கா, சென்னை சென்ட்ரல் பகுதியில் 1854-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல், காற்று மற்றும் ஒலி மாசு காரணமாக இந்த உயிரியல் பூங்கா 1985-ம் ஆண்டு வண்டலூருக்கு மாற்றப் பட்டது. அப்பூங்காவை அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் திறந்துவைத்தார். அப்போது அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டி உயிரியல் பூங்காவில் இருந்து காண்டாமிருகம் கொண்டுவரப் பட்டது.
அது உடல்நலக் குறைவு காரணமாக 1989-ம் ஆண்டு இறந்தது. அதன் பிறகு புதிய காண்டாமிருகம் கொண்டுவரப் படவில்லை.
இப்பூங்காவில் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன ஆகியவை அடங்கிய 171 இனங்களைச் சேர்ந்த 2,644 உயிரினங்கள் காட்சிப்படுத் தப்பட்டுள்ளன. காண்டாமிருகம் இல்லாதது பெரும் குறையாக இருந்து வந்தது.
இந்நிலையில், வண்டலூர் பூங்காவின் தலைவராக உள்ள முதல்வர் பழனிசாமி, ஒரு ஜோடி காண்டாமிருகத்தை வழங்குமாறு குவாஹாட்டி பூங்காவுக்கு கடிதம் எழுதி இருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று, ஒரு காண்டாமிருகம் நேற்று முன்தினம் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தற்போது கால்நடை மருத்துவர்களின் தொடர் கண் காணிப்பில் இருந்து வருகிறது. விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு விடப்படும் என்றும், அதன் ஜோடி காண்டாமிருகம் விரைவில் கொண்டுவரப்படும் என்றும் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 30 ஆண்டு களுக்கு பிறகு வண்டலூர் பூங்காவில் காண்டாமிருகம் காட்சிப்படுத்தப்பட இருப்பது குறிப்பிடத் தக்கது.