சென்ற முறை பணமதிப்பு நீக்க நடவடிக்கை, இம்முறை 370 பிரிவு நீக்கம்: சர்வாதிகாரம், பிற்போக்கு நடவடிக்கை: கமல் விமர்சனம்

சென்ற முறை பணமதிப்பு நீக்க நடவடிக்கை, இம்முறை 370 பிரிவு நீக்கம்: சர்வாதிகாரம், பிற்போக்கு நடவடிக்கை: கமல் விமர்சனம்
Updated on
1 min read

370 மற்றும் 35 ஏ சட்டப் பிரிவுகள் இயற்றப்பட்டதற்கு வரலாறு உண்டு. எனவே அதில் மேற்கொள்ள்ளப்படுகின்ற எந்த மாற்றமும் தகுந்த ஆலோசனையும் நடைபெற்றிருக்க வேண்டும். தொடர்ந்து சர்வாதிகாரமும், பிற்போக்குத்தன்மையும் கொண்ட செயல்களே இந்த அரசால் மேற்கொள்ளப்படுகிறது என மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கடந்த 1954-ம் ஆண்டு அரசமைப்புச்சட்டம் 370 பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமை அந்தஸ்தை மத்தியஅரசு இன்று ரத்து செய்தது. அதற்கான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்தார். நீண்ட விவாதத்துக்குப்பின் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து பலரும் ஆதரவும், கண்டனமும் தெரிவித்து வரும் நிலையில் மக்கள் நீதிமய்யம் நிறுவனர் கமல் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (5/8/19) வெளியிட்டுள்ள அறிக்கை:

“இந்த தீர்மானத்தின்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட உள்ளது. சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும், சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும் கொண்டுவரப்பட்டுள்ளது.
370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை நீக்கிய விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல்.

இது போன்ற முக்கியமான முடிவுகள் மீது பாராளுமன்றத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய எவ்வித விவாதத்தையும் மேற்கொள்ளாமல், தங்களுக்கு அவையில் இருக்கின்ற பெரும்பான்மை ஒன்றினை மட்டும் கருத்தில் கொண்டு மத்திய அரசு இம்முடிவினை எடுத்திருக்கின்றது.

370 மற்றும் 35 ஏ சட்டப் பிரிவுகள் இயற்றப்பட்டதற்கு வரலாறு உண்டு. எனவே அதில் மேற்கொள்ள்ளப்படுகின்ற எந்த மாற்றமும் தகுந்த ஆலோசனையும் நடைபெற்றிருக்க வேண்டும். 370 மற்றும் 35 ஏ சட்டப் பிரிவுகளை சட்டபூர்வமாக நீக்கப்படுவது குறித்து தனியான விவாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

 ஜனநாயகத்தில் எதிர்க்குரல்களை முடக்கும் இந்த அரசின் ஆதிக்கப்போக்கினை மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிக்கிறது. சென்ற முறை பண மதிப்பிழப்பு, இந்த முறை 370 சட்டப் பிரிவு நீக்கம் என்று தொடர்ந்து சர்வாதிகாரமும், பிற்போக்குத்தன்மையும் கொண்ட செயல்களாகவே இந்த அரசால் மேற்கொள்ளப்படுகிறது”.


இவ்வாறு அறிக்கையில் கமல் தெரிவித்துள்ளார்.  

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in