Published : 05 Aug 2019 06:12 PM
Last Updated : 05 Aug 2019 06:12 PM

முதுகுளத்தூர் அருகே பண்ணைக்குட்டை அமைத்து பொதுமக்கள், கால்நடைகளின் தாகம் தீர்க்கும் விவசாயி: குவியும் பாராட்டு

முதுகுளத்தூர் அருகே பண்ணைக்குட்டை அமைத்து சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் 20,000 ஆடுகளுக்கு இலவசமாக தண்ணீர் வழங்கி வரும் விவசாயிக்கு, அப்பகுதி மக்கள், கால்நடை வளர்ப்போர் நன்றி செலுத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்  மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலச்சிறுபோது  கிராமத்தைச் சேர்ந்த விவசாயி  முகமது ரபீக்(58). இவருக்கு அக்கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்நிலத்தில் மழையை நம்பியே விவசாயம் செய்து வந்தார்.

மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக கடும் வறட்சியால் , குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. தண்ணீர் இல்லாததால் மக்கள் கால்நடைகளை குறைந்த விலைக்கு விற்றுவருகின்றனர்.

இந்நிலையில் விவசாயி ரபீக் ஆழ்துளை கிணறு, பம்பு செட் அமைக்க முடிவு செய்தார். ஆனால் பம்பு செட் அமைக்க மின்வசதி கிடைக்கவில்லை. அதனால் வேளாண்மை பொறியியல் துறையை அணுகினார். அவர்கள் 7.5 குதிரைத்திறன் கொண்ட சூரிய சக்தி மின் மோட்டார் 90 சதவீத அரசு மானியத்தில் (ரூ.7.18 லட்சம் செலவில்) அமைத்துக் கொடுத்தனர். ஏற்கனவே ஆழ்துளை கிணறு அமைத்திருந்த ரபீக், இந்த மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து விவசாயம் செய்யத் தொடங்கினார். மேலும்  தனது நிலத்தில் 30 சென்ட்டில் அரசு மானியத்தில் பண்ணைக்குட்டை அமைத்திருந்திருந்தார்.

குடிநீருக்கும், குளிக்கவும், கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாமல் அலையும் இப்பகுதி மக்களுக்காக கடந்த 2 ஆண்டுகளாக பண்ணைக்குட்டையில் தண்ணீர் நிரப்பி, இலவசமாக தண்ணீர் வழங்கி வருகிறார்.

குறிப்பாக ஆனையூர்,  கொடுமலூர் , கீழ கன்னிச்சேரி  உள்ளிட்ட  20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 20,000 செம்மறி, வெள்ளாடுகளை, 5 முதல் 10 கி.மீட்டர் தொலைவில் இருந்து அழைத்து வந்து, ரபீக்கின் பண்ணைக்குட்டையில் தினமும் தண்ணீர்  தாகத்தைத் தனித்து விட்டுச் செல்கின்றனர். ரபீக்குக்  நன்றியும் சொல்லிவிட்டுச் செல்கின்றனர்.  

மேலும் சுற்றுவட்டார கிராம மக்கள் வாகனங்களில் வந்து குளிப்பதும், தண்ணீரும் எடுத்தும் செல்கின்றனர். இந்த தண்ணீரை பயன்படுத்தி ரபீக், பருத்தி,  மிளகாய்,வெண்டைக்காய் , கீரை  உள்ளிட்ட விவசாய பணிகள் செய்கிறார். 

இதுகுறித்து முகமது ரபீக் கூறும்போது, "வறண்ட இப்பூமியில்  ஆடு மாடுகளுக்கும், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக தண்ணீர்  கொடுக்க வேண்டும்என்று வெகுகாலமாக  எண்ணி இருந்தேன் . அதன்படி வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள் சரியான நேரத்தில் பண்ணைக்குட்டை, சூரிய சக்தி மின்மோட்டார் அரசு மானியத்துடன் அமைத்துக் கொடுத்தனர்.

இதன்மூலம் பொதுமக்களுக்கும், வாயில்லா ஜீவன்களுக்கும் தண்ணீர் கொடுப்பது மனதிற்கு நிம்மதியைத் தருகிறது . இதற்காக உதவிய வேளாண்மை பொறியியல் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மழை வரும் முன்னரே விவசாயிகள் அதிகளவில் பண்ணைக்குட்டைகள் அமைத்து மழைநீரை சேமித்து விவசாயத்துக்கும், கால்நடைகளுக்கும், மீன் வளர்ப்பதற்கும் பயன்படுத்த வேண்டும் என்றார்.

செம்மறி ஆடு வளர்க்கும் மேலக்கொடுமலூரைச் சேர்ந்த விவசாயி குமரவேலு கூறும்போது, தொடர் வறட்சியால் ஆடுகளுடன் வேறு மாவட்டத்துக்கு இடம் பெயரலாம் என இருந்தோம். அந்த நேரத்தில் விவசாயி ரபீக்,  பண்ணைக்குட்டை மூலம் தாராளமாக தண்ணீர் நிரப்பி கால்நடைகளுக்காக வழங்குகிறார் என்ற செய்தி தெரியவந்தது. இதனால் வெளி மாவட்டங்களுக்குச் செல்லவில்லை. அதனால் ரபீக்குக்கு மிகுந்த நன்றியை செலுத்தி வருகிறோம் என்றார்.

ரபீக்கின் செயலைப் பார்த்த ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் ஆர்.பாலாஜி, உதவி பொறியாளர் பாஸ்கரன் ஆகியோர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விவசாயி ரபீக்கின் பண்ணைக்குட்டையை பார்வையிட்டு, அவரை ஊக்குவிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x