Published : 05 Aug 2019 10:36 AM
Last Updated : 05 Aug 2019 10:36 AM

செல்போன், டிவி மோகத்துக்கு இடையே குழந்தைகளிடம் கதை சொல்லி ஒழுக்கத்தை வளர்க்கும் விவசாயி

மதுரை

குழந்தைகளுக்கு கதை சொல்லும் கலாச்சாரம் குறைந்து வரும் நிலையில் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் கீழக்குயில்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பொன். அரிச்சந்திரன்.

தாத்தா, பாட்டி, பெற்றோர் சொல்லக் கதைகள் கேட்டு வளர்ந்தது அக்காலம். ஆனால், இன்று கதை சொல்ல பெற்றோருக்கும் நேரமில்லை. ஸ்மார்ட் போன் பழக்கத்துக்கு அடிமையான குழந்தைகளும், கதை கேட்க தாத்தா, பாட்டியை முதியோர் இல்லத்தில் தேடும் காலம் இது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்போதைய குழந்தைகள் கதைகளை இணைய தளங்களில் கேட்டு வருகின்றனர். வீதிகளில் ஓடியாடி விளையாடிய காலம்போய் போன்களில் விளையாடும் காலகட்டமிது.

எனவே, குழந்தைகளுக்கு கதைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதை சொல்லிகள் தேவைப்படுகின்றனர். அந்த வகையில் மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பொன்.அரிச்சந்திரன் (62), மேடைகளில் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி வருகிறார். மேலும், பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடம் கதைகள் சொல்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

கீழக்குயில்குடி கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரை படித்து விட்டு, மதுரையில் பத்தாம் வகுப்புப் படித்தேன். தாத்தா, பாட்டி, பெற்றோர் கதைகள் சொல்லியே ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்தினர். திண்ணைகளில், மந்தைகளில், வயல்வெளிகளில் பெரியவர்கள் கதைகள் சொல்லியதை கேட்டு மனதில் பதிந்ததை இப்போது சொல்லி வருகிறேன்.

புராணங்கள், நாட்டுப் புறக்கதைகள், செவிவழியாகக் கேட்டதையும் கதையாகச் சொல்லி வருகிறேன். அன்று கதைகள் சொல்வதும், கேட்பதும் பொழுதுபோக்காக இருந்தாலும் அது மனிதனை நல்வழிப்படுத்துவதாக இருந்தது. இதன் மூலம் எழுத, படிக்கத் தெரியாதவர்கள்கூட நாடகம், கவிதைகள் இயற்றும் ஆற்றல் பெற்றவர்களும் உண்டு.

ஆனால், தற்போது பணம் சேர்க்கும் ஆசையில் குழந்தைகளுக்கு கதை சொல்ல மறந்துவிட்டோம். அவரவர் குடும்பத்தைப் பற்றியோ, அவர்களது தலைமுறையைப் பற்றிக்கூட சொல்லிக் கொடுப்பதில்லை. எனவே, குழந்தைகள், பள்ளி மாணவர்களுக்கு கதைகள் சொல்லித்தர வேண்டிய அவசியம் இருக்கிறது.

என்னிடம் வந்து கதைகள் கேட்ட எழுத்தாளர்கள் பலர் புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளனர். வெளிநாட்டினரும் என்னிடம் கேட்ட கதைகளுக்கு ஆதாரங்களைத் தேடி ஆவணப்படுத்தியுள்ளனர். கதை கேட்க மறந்ததால் மனிதநேயம் இழந்து வாழ்கிறோம். தற்போது அறிவுக்கல்வி வளர்ந்துள்ளது. ஆனால். அது ஒழுக்கக் கல்வியாக இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x